/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/எழுபிறவி வினை களைவார் லிங்கேஸ்வரர்!எழுபிறவி வினை களைவார் லிங்கேஸ்வரர்!
எழுபிறவி வினை களைவார் லிங்கேஸ்வரர்!
எழுபிறவி வினை களைவார் லிங்கேஸ்வரர்!
எழுபிறவி வினை களைவார் லிங்கேஸ்வரர்!
ADDED : ஜன 28, 2024 11:54 PM

மூர்த்தி, தலம், தீர்த்தம் கொண்ட கோவில்களில் வழிபடுவது, கோடானு கோடி நன்மைகளை வாரிக் கொடுக்கும். மூர்த்தி என்பது கருவறையில் உள்ள மூலவர்; தலம் என்பது கோவில் கட்டும் முன்பாகவே சுவாமி எழுந்தருளிய தலவிருட்சம்; தீர்த்தம் என்பது, நீராடுவோரின் பாவம் போக்குவது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் தெய்வீகம் நிரம்பியிருக்கும். தல விருட்சத்தை, தினமும் மூன்று முறை வலம் வந்தால், புத்திரபாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் திருத்தலத்தில் பாதிரி மரத்தை சுற்றிவந்து, துாப, தீபம் காட்டி வழிபட்டால், எவ்வகை சாபமும் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். அந்தவகையில், திருப்புக்கொளியூர் திருத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளி, அருளாட்சி புரியும் அவிநாசி திருத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் சிறப்பு பெற்றது.
அவிநாசிலிங்கேஸ் வரரை வழிபட்டால், ஏழு பிறவிகளாக பின்தொடரும் துயரம் அனைத்தும் நீங்கும் என்பது திண்ணம்.
'காலை தொழ அற்றைவினை கட்டகலும் கட்டுச்சி வேலைதொழ இப்பிறப்பில் வெந்துயர்போம் - மாலையினில் வந்து சிவன்தாளை வந்தித்தால் ஏழ்பிறப்பின் வெந்துயரம் எல்லாம் விடும்'
சிவாலயங்களில், உஷத்காலம், காலசந்தி, உச்சிக்காலம், சாயட்சை, அர்த்தசாமம் என, ஐந்துவேளை பூஜைகள் நடக்கின்றன. அப்படியிருந்தாலும், காலை, மதியம், மாலையில் வணங்குவது, பெரும் பயனை கொடுக்கும் என்கிறது, இந்த சிவதரிசன மகத்துவம் என்ற நுால்.
காலை வேளையில் சிவபெருமானை தரிசனம் செய்தால், பற்றியுள்ள வினை முழுமையாக அகலும்; உச்சிகால வழிபாடு இப்பிறப்பின் துயரங்களை போக்கும்; மாலை நேர தரிசனம், ஏழு பிறப்பின் கடும் துயரங்களையும் போக்கிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
அவ்வகையில், 'நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே' என்று திருஞானசம்பந்தர் பாடியது போல், பரமனடி பணிவார் களின் துயர் அனைத்தும் மறைந்தொழியும்.
ஊழிக்கால ஊர்த்துவ தாண்டவமாடிய திருவிளையாடலின் போது, சிவபெருமான், 16 கரங்களுடன் விஸ்வரூபமாக திருநடனம் புரிந்தார். தில்லைக்காளியம்மனும், எட்டு கரங்களுடன் எடுத்த அடி மாறாமல், சரிநிகர் சமானமாய் ஆடினாள். ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாக ஈசன், வலது காலை துாக்கி உச்சியில் வைத்து ஆடிய பிறகே, ஆட்டம் முடிந்தது; அம்மையும் சாந்த சொரூபமாக மாறி நின்றாள்.
'காசியில் வாசி அவிநாசி' எனும் அவிநாசித்திருத்தலம், பார்வதி தேவிக்கும் பரமேஸ்வரன் அருள்பாலித்த இடம்; மூவரும், தேவரும் பாடித்தொழுது பரமனால் ஆட்கொள்ளப்பட்டது போல், பக்தர்களுக்கு படியளிக்கவும், அவிநாசியப்பர், அண்டம் உள்ளளவும் ஆனந்தமாய் காத்திருக்கிறார் அவிநாசியில்!