/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உயிரோவியமாய் சிலிர்த்தெழும் மனித முகங்கள்உயிரோவியமாய் சிலிர்த்தெழும் மனித முகங்கள்
உயிரோவியமாய் சிலிர்த்தெழும் மனித முகங்கள்
உயிரோவியமாய் சிலிர்த்தெழும் மனித முகங்கள்
உயிரோவியமாய் சிலிர்த்தெழும் மனித முகங்கள்
ADDED : பிப் 10, 2024 11:24 PM

தன் குடும்பத்தை சேர்ந்த இளைஞரின் திருமண ஆல்பத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர், அவர்களது உறவினர்கள். மணமகன், மணமகளுடன், உற்றார், உறவினர் புடைசூழ இருந்த 'குரூப் போட்டோ'வில், சில நிமிடம் கண் பதித்து, ஒவ்வொருவரை பற்றி அளவளாவி கொண்டிருக்கையில், அனைவரது விழிகளும் திடீரென ஆச்சர்யத்தில் விரிகின்றன. முகத்தில் சந்தேக கோடுகள் நிரம்ப, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்...
மணமகனின் தந்தை இறந்து சில ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில், அந்த ஆல்பத்தில், அவர் மணமகன் அருகே உயிரோடு நின்றுக் கொண்டிருந்த காட்சி தான், இதற்கு காரணம்.
''இது, என் அப்பா தான்; ஆனா, டிராயிங்...'' என அந்த இளைஞர் கூற, வியப்பில் வாய் பிளக்கின்றனர் உறவினர்கள். ஆம், 'ைஹப்பர் ரியாலிஸ்டிக் போர்ட்ராய்ட்ஸ்' எனப்படும் ஓவியங்கள் தான், இப்படியான உயிரோட்டத்தை தருகின்றன.
இந்த ஓவியக்கலையை திறம்பட கற்று, தொழில் ரீதியாகவே செய்து வருகிறார், திருப்பூர், அவிநாசி ரோடு, பெரியார் காலனியில் வசிக்கும் சிவபாலன். 25 என்ற இளைஞர்.
''நான்காம் வகுப்பில் இருந்தே ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் இருந்தது. 8ம் வகுப்பில் இருந்து, ஓவியப் போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளை பெறத் துவங்கினேன். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏராளமான ஓவிய முறைகள் வந்தாலும், கையால் வரையப்படும் ஓவியங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறையவில்லை.
குறிப்பாக, கற்பனை காட்சிகளை உயிரோட்டம் நிறைந்ததாக காண்பிக்கும் பண்பு, இவ்வகை ஓவியங்களுக்கு உண்டு. கிராபிக் பென்சில், நிலக்கரி பென்சில் உதவியுடன் இவ்வகை ஓவியம் வரைகிறேன். மனிதர்களின் முகங்களை, உயிரோவியமாக வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம்'' என்றார்.
---
சிவபாலன் தீட்டிய ஓவியங்கள்
---
சிவபாலன்