/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குட்டை திடல் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு; இரண்டு பேர் மட்டுமே பங்கேற்பு குட்டை திடல் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு; இரண்டு பேர் மட்டுமே பங்கேற்பு
குட்டை திடல் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு; இரண்டு பேர் மட்டுமே பங்கேற்பு
குட்டை திடல் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு; இரண்டு பேர் மட்டுமே பங்கேற்பு
குட்டை திடல் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு; இரண்டு பேர் மட்டுமே பங்கேற்பு
ADDED : மார் 24, 2025 11:08 PM

உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவிற்காக, குட்டை திடல் ஏலம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வரும் ஏப்., 1ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது. 8ம் தேதி, கம்பம் போடுதல், 10ம் தேதி, கிராம சாந்தி, 11ம் தேதி, கொடியேற்றம், பூவோடு ஆரம்பம், 15ல், பூவோடு நிறைவு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், ஏப்., 17ம் தேதியும், பரிவேட்டை, வாணவேடிக்கை, 18ம் தேதியும், 19ம் தேதி, கொடியிறக்கம், மகா அபிேஷகம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு, உடுமலை குட்டைத்திடலில், விளையாட்டு உபகரணங்கள், ராட்டிணம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறுவ, வருவாய்த்துறை சார்பில் ஏலம் விடப்படுகிறது.
இதற்கு, குறைந்த பட்ச ஏலத்தொகையாக, ஒரு கோடியே, 9 லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.
ஏல முன் வைப்பு தொகையாக, 27 லட்சத்து, 28 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டு, கடந்த, 17ம் தேதி ஏலம் நடந்தது. இதில் ஒருவர் மட்டுமே பங்கேற்று, நிர்ணயிக்கப்பட்ட தொகை கூடுதலாக உள்ளதாக கூறி ஏலம் கோரவில்லை.
இரண்டாவது முறையாக, நேற்று கோட்டாட்சியர் அலுவலக அரங்கில், தாசில்தார் கவுரிசங்கர் தலைமையில் நடந்தது. நேற்று இரண்டு பேர் பங்கேற்ற நிலையில், தொகை அதிகம் என கூறியதோடு, குறைக்க வலியுறுத்தினர். இதனால், நேற்றும் ஏலம் நடக்கவில்லை.
ஆண்டு தோறும், பொழுது போக்கு அம்சங்களுக்கு கூடுதல் கட்டணமும், திருவிழாக்கடைகளில் அதிக வாடகையும் பெற்று, பொதுமக்கள் பாதித்து வருகின்றனர். ஒரு சில ஆண்டுகள் போட்டி அதிகரிக்கும் போது, ஏலத்தொகை உயர்ந்து வருகிறது. நடப்பாண்டு 'சிண்டிகேட்' அமைத்துக்கொண்டு, ஏலத்தொகையை குறைக்க வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே, அதிகமான நபர்கள் பங்கேற்று, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுக்கவும், பொழுது போக்கு அம்சங்களுக்கான குறைந்த கட்டணம் நிர்ணயிக்கவும், விதிமீறல்களை கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.