/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அரசு மருத்துவமனையின் புதிய முயற்சிக்கு சபாஷ் சொல்லுங்க! காய்கறி, உணவுக்கழிவு மூலம் எரிவாயு உற்பத்திஅரசு மருத்துவமனையின் புதிய முயற்சிக்கு சபாஷ் சொல்லுங்க! காய்கறி, உணவுக்கழிவு மூலம் எரிவாயு உற்பத்தி
அரசு மருத்துவமனையின் புதிய முயற்சிக்கு சபாஷ் சொல்லுங்க! காய்கறி, உணவுக்கழிவு மூலம் எரிவாயு உற்பத்தி
அரசு மருத்துவமனையின் புதிய முயற்சிக்கு சபாஷ் சொல்லுங்க! காய்கறி, உணவுக்கழிவு மூலம் எரிவாயு உற்பத்தி
அரசு மருத்துவமனையின் புதிய முயற்சிக்கு சபாஷ் சொல்லுங்க! காய்கறி, உணவுக்கழிவு மூலம் எரிவாயு உற்பத்தி
ADDED : செப் 01, 2025 12:34 AM

பல்லடம்; காய்கறி, பழம் மற்றும் உணவுக்கழிவுகளைப் பயன்படுத்தி, இயற்கை எரிவாயு தயாரிக்கும் புதிய முயற்சியை, பல்லடம் அரசு மருத்துவமனை நிர்வாகம் மேற்கொள்கிறது.
பல்லடம் அரசு மருத் துவமனைக்கு, தினமும், 700க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வருகின்றனர். புறநோயாளிகள், உள் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் பயன்படுத்திய காய்கறி, பழங்கள் மற்றும் உணவுக் கழிவுகளை சேகரித்து, இயற்கை எரிவாயு தயாரிக்கும் பணியை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. செவிலியர் கவிதா, இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டார்.
சன்மானத் தொகையில் உருவான திட்டம் கவிதா கூறியதாவது:
மத்திய அரசின் 'காயகல்பம்' திட்டம் வாயிலாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு விருது மற்றும் சன்மானம் கிடைத்தது. அந்த தொகையை பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். மருத்துவ மனையில் சேகரமாகும் உணவுக்கழிவுகளை பயன்படுத்தி, இயற்கை எரிவாயு தயாரிக்கலாம் என்பதை அறிந்து கொண்டேன்.
'கோ பரதன்' திட்டம் கைகொடுத்தது மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்த போது அனுமதி அளித்தனர். மத்திய அரசின் 'கோ பரதன்' திட்டம் மூலம், இயற்கை எரிவாயு தயாரிக்கலாம் என்பதை அறிந்து, செயல்படுத்த விரும்பினோம். இதற்கான உபகரணங்களை தருவித்து, சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதலில், மாட்டு சாணம் வாங்கி ஏழு நாட்கள் ஆய்வு செய்யப்பட்டது.
காய்கறி கழிவுகள், உணவுகளைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயு தயாரிக்கப்பட்டது. தினமும், 5 கிலோ அளவுக்கு கழிவுகள் எங்களுக்கு கிடைக்கிறது. அவற்றை இந்த உபகரணத்தில் போட்ட பின், எட்டு மணி நேரம் கழித்து இயற்கை எரிவாயு கிடைக்கும். அதனை ஒன்றரை மணி நேரம் வரை எங்களால் பயன்படுத்த முடிகிறது. மீதம் ஆகும் உணவு கழிவுகளை உரமாகவும் பயன்படுத்தலாம். ஏற்கனவே இது போன்ற திட்டம் பயன்பாட்டில் இருந்த போதும், அரசு மருத்துவமனையில், நாங்கள்தான் முதன்முதலாக செயல்படுத்தி உள்ளோம் என்பது பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
செவிலியர் ஆர்வத்தால் சாத்தியமானது
செவிலியர் கவிதாவின் ஆர்வம் மற்றும் முயற்சியால் மட்டுமே இது சாத்தியமானது. மருத்துவமனைக்கு கிடைத்த விருது மற்றும் தன்னார்வலர்களின் உதவியால் இத்திட்டத்தை செயல்படுத்த முடிந்தது. இதன் வாயிலாக, இயற்கையான, பாதுகாப்பான எரிவாயு கிடைப்பதுடன், செலவும் குறைகிறது. முதல் கட்ட முயற்சி வெற்றியடைந்து உள்ளது. எதிர்வரும் நாட்களில், கூடுதல் எரிவாயு தயாரிக்க முயற்சி செய்வோம்.
- ராமசாமி,
தலைமை மருத்துவர்,பல்லடம் அரசு மருத்துவமனை.