Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மனு வாங்கினால் மட்டும் போதாது... தீர்வு காண்பதும் அவசியம்!

மனு வாங்கினால் மட்டும் போதாது... தீர்வு காண்பதும் அவசியம்!

மனு வாங்கினால் மட்டும் போதாது... தீர்வு காண்பதும் அவசியம்!

மனு வாங்கினால் மட்டும் போதாது... தீர்வு காண்பதும் அவசியம்!

ADDED : செப் 23, 2025 06:09 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 404 மனுக்கள் பெறப்பட்டன. அம்மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண்பது, துறை சார்ந்த அதிகாரிகளின் பொறுப்பாகிறது.

திருப்பூர் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனீஷ் நாரணரே தலைமை வகித்தார். கலெக்டர் மற்றும் டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவத்சலம் ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.

வெள்ளகோவில், வேலப்பநாயக்கன் வலசு பகுதி மக்கள்:



தனியார் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தினர், வேலப்பநாயக்கன் வலசு பகுதியில், உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் ஊரில், வீடுகளுக்கு அருகாமையில், 60 அடி உயரத்தில், ஐந்து உயர்மின் கோபுரங்கள் அமைத்துள்ளனர். குடியிருப்புகள், மாணவ, மாணவியர் 50 பேர் படிக்கும் அரசு பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவை அமைந்துள்ளன. மக்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் அமைக்கப்பட்டு வரும் டவர்லைன் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கம்:

பல்லடம் - மங்கலம் ரோட்டில், கல்லம்பாளையம் கிராமத்தில், நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த நிலத்தை 24 குடும்பத்தினருக்கு, தலா 2 சென்ட் வீதம் வழங்க கோரி, 2016ல் அப்போதைய கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. தகுதியானவர்களுக்கு பட்டா வழங்க கோர்ட் தீர்ப்பும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர், அத்துமீறி அந்த நிலத்தை ஆக்கிரமித்து, வீடு கட்டிவிட்டனர். ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றவும் கோர்ட் உத்தரவு பெற்றுள்ளோம். கோர்ட் உத்தரவுப்படி, அந்த வீடுகளை அகற்றி விட்டு, தகுதியானவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும்.



நண்பர்கள் ஆட்டோ சங்கத்தினர்:

பத்து ஆட்டோ டிரைவர்கள் இணைந்து, முருகன் மில் முதல் மாதேஸ்வரன் நகர் வரை ஆட்டோ ஓட்டி வருகிறோம். இந்நிலையில் வேறு ஆட்டோ சங்கத்தினர், டி.கே.டி., மில் முதல் கணபதிபாளையம் வரை ஆட்டோ ஓட்டக்கூடாது என மிரட்டிவருகின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மிரட்டல் விடும் நபர்களிடமிருந்து எங்களை பாதுகாக்கவேண்டும்.

பூலுவப்பட்டி - நெருப்பெரிச்சல் ரோடு பொதுமக்கள்:

பூலுவப்பட்டி - நெருப்பெரிச்சல்ரோட்டில், தனியார் மதுக்கூடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. அப்பகுதியில் வி.ஏ.ஓ., அலவலகம், மாவட்ட சுகாதார அலுவலகம் அமைந்துள்ளன. பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதால், தனியார் பார் அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்யவேண்டும்.

மண்ணெண்ணெய் கேன் பறிமுதல்



தாராபுரம் தாலுகா, சொக்கநாதம்பாளையத்தை சேர்ந்த, 75 வயது முதியவர் ஒருவர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவரிடமிருந்த பையை போலீசார் ஆய்வு செய்தபோது, மண்ணெண்ணெய் நிரப்பிய கேன் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த கேனை பறிமுதல் செய்துவிட்டு, மனு அளிக்க அனுப்பி வைத்தனர். விசாரணையில், தனது இளைய மகன், வீட்டை ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்டதாக புகார் அளிக்க வந்ததாக கூறினார்.

கலெக்டருக்கு ஒரு சபாஷ்

நேற்று காலை முதலே, குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க மக்கள் வருகை குறைந்து காணப்பட்டது. இதனையடுத்து, மதியம், 12:30 மணிக்கு, கூட்ட அரங்க கதவுகள் பூட்டப்பட்டன. அரசு அலுவலர்கள் மட்டும் உள்ளே இருந்தனர். எந்தெந்த துறையினர் அதிக எண்ணிக்கையில் மனுக்களை நிலுவையில் வைத்துள்ளனர் கண்டறியப்பட்டு, குறிப்பிட்ட அலுவலர்களிடம், கலெக்டர் விளக்கம் கேட்டார். மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, தீர்வு ஏற்படுத்த அறிவுறுத்தினார். ஆய்வு கூட்டம் முடிவடைந்தபின், கதவுகள் திறக்கப்பட்டு, மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us