Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தெலங்கானாவில் தொழில் முதலீடு; திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு

தெலங்கானாவில் தொழில் முதலீடு; திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு

தெலங்கானாவில் தொழில் முதலீடு; திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு

தெலங்கானாவில் தொழில் முதலீடு; திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு

ADDED : செப் 11, 2025 06:46 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; தெலங்கானாவில் தொழில் முதலீடு செய்ய முன்வருவோருக்கு, 40 கோடி ரூபாய் வரை மூலதன மானியம் வழங்கி ஊக்குவிப்பதாக, அம்மாநில அமைச்சர் அழைப்புவிடுத்துள்ளார்.

தெலங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் துாதில்லா ஸ்ரீதர்பாபு, தொழில் மற்றும் உள்கட்டமைப்பு துணை தலைவர் சஷங்கா, காகதியா மெகா ஜவுளி பூங்கா இயக்குனர் தரணிகாந்த் ஆகியோர் திருப்பூர் வந்திருந்தனர். திருப்பூரில் இயங்கும், முன்னணி பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களை பார்வையிட்டு, உற்பத்தி படிநிலைகளை கேட்டறிந்தனர்.

அதனை தொடர்ந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், ஏற்றுமதியாளர்களை சந்தித்தனர். பொதுசெயலாளர் திருக்குமரன் வரவேற்றார். துணை தலைவர் ராஜ்குமார், திருப்பூர் பின்னலாடை தொழில் படிநிலை வரலாறுகளை விளக்கினார்.

ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிமணியன் பேசுகையில்,''உற்பத்தியில் வலிமையாக இருக்கும் திருப்பூர், தெலுங்கானா தொழில் வளர்ச்சிக்கும் துணை நிற்கும்; இந்தியாவில், உலக சந்தை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன,'' என்றார்.

தெலங்கானா அமைச்சர் துாதில்லா ஸ்ரீதர்பாபு பேசுகையில்,''தெலுங்கானாவில், சிர்சில்லா ஆடை பூங்காவில் இருந்து, 40 பேர் திருப்பூர் வந்து, தொழில் தொடர்பான அனுபவம் பெற்றனர்.

தகுந்த ஆலோசனையும், வழிகாட்டுதலும் வழங்கி, ஊக்குவித்துள்ளீர்கள். தெலுங்கானா, 40 கோடி ரூபாய் வரை, 25 சதவீத மூலதன மானியம் வழங்கும். எட்டு ஆண்டுகளுக்கு, 8 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.

ஐந்து ஆண்டுகளுக்கு, யூனிட்டுக்கு, 2 ரூபாய் மின்சார மானியம் வழங்கப்படும்; ஏழு ஆண்டுகள் வரை, ஜி.எஸ்.டி., 100 சதவீதம் திரும்ப வழங்கப்படும். போக்குவரத்து மானியமாக, 25 சதவீதம், அதிகபட்சம் 75 சதவீதம் வரை, ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும்,'' என்றார்.

இணை செயலாளர் குமார் துரைசாமி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us