/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/காலத்தின் கண்ணாடியாக திகழும் வரலாறு...காலத்தின் கண்ணாடியாக திகழும் வரலாறு...
காலத்தின் கண்ணாடியாக திகழும் வரலாறு...
காலத்தின் கண்ணாடியாக திகழும் வரலாறு...
காலத்தின் கண்ணாடியாக திகழும் வரலாறு...
ADDED : ஜன 27, 2024 11:34 PM

ஒரு நாடு பெருமையும், புகழும் அடைய வேண்டுமானால், அந்நாட்டின் நாகரிகம், பாரம்பரியம், கலாசாரம் வெளிக்கொணரப்பட வேண்டும். இதற்கு துணை புரிவது தான் வரலாறு. அந்த வகையில் சமீப ஆண்டுகளாக வரலாறு சார்ந்த ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன.
இதனை உணர்த்தும் வகையில், திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரி முதுகலை வரலாற்றுத்துறை மற்றும் விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து, 'தமிழகத்தின் பொக்கிஷம் வரலாறா, கலாசாரமா, பண்பாடா அல்லது தொல்லியல் பொருட்களா?' என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கை நடத்தின. பல இடங்களில் இருந்தும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
கனவை நனவாக்கும்!
தற்போதைய வரலாறு பாட திட்டம், மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை வளமானதாக மாற்றும் வகையில், அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்கான களமாக, இது அமைந்திருக்கிறது. நம் பாரம்பரியம், பண்பாடு மற்றும் முன்னோரின் வாழ்வியலை படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.
அழிந்து போன கலாசாரத்தை மீட்டெடுக்கும் வகையில், அரசு, நிதி ஒதுக்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் அகழ்வாராய்ச்சி செய்து, நம் முன்னோரின் வாழ்வியலை வெளிக்கொணர்ந்து, உலகெங்கும் பறைசாற்றி வருகிறது. வட மாநிலங்களில் உள்ள மொகஞ்சதாரோ, ஹரப்பா மட்டும் தான் பழமையானது என்ற கருத்து இருந்த நிலைமாறி, தற்போது கீழடி, ஆதிச்சநல்லுார் போன்றவையும் பழமையை பறைசாற்றுகின்றன.
-டாக்டர். கிரிஜா ஆரோக்கியமேரிவரலாற்று துறை தலைவர், எல்.ஆர்.ஜி., கல்லுாரி.
நாட்டின் பெருமை!
ஒரு நாட்டின் வரலாறு தெரியவில்லை என்றால், அந்நாடு மற்ற நாடுகளுக்கு அடிமையாகிவிடும். நம் நாட்டின் கலாசாரம் வெளியே தெரிவதால் தான், உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கின்றன. கலாசாரம் என்பது, ஒரு சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை, நல்வழிப்படுத்துவதற்கான நெறிமுறை. கம்யூனிசம், சோஷலிசம் என, பல சித்தாத்தங்களை மக்கள் கொண்டிருப்பர். அந்த வகையில் மனிதர்களிடையே புதிய கருத்து உருவாகும்; அந்த கருத்துக்கு, எதிர் கருத்து ஒன்றும் உருவாகும்; இவை இரண்டும் சேர்ந்து, ஒரு புதிய கருத்து உருவாகும். கருத்து வளர்ச்சி, எண்ணம், சிந்தனை மற்றும் செயல்பாட்டு வளர்ச்சி என்பது வரலாற்றின் வாயிலாக கிடைக்கிறது.
- தேவபிரகாசம்
பேராசிரியர், அரசு கலைக்கல்லுரி, அரியலுார்.
மாணவர்கள் கல்வி பயில்வதன் நோக்கமே, வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்பது தான். அதுவும், போட்டி தேர்வெழுதி அரசுப்பணி பெற பலரும் விரும்புகின்றனர். வரலாறு, அதன் அங்கமாக உள்ள அரசியல் சார்ந்து நிறைய கேள்விகள் கேட்கப்படுவதால், வரலாறு படிப்பது, அரசுப்பணி பெற உதவுகிறது. 'வரலாறு, ஏன் படிக்கிறீர்கள்?' என கேலி செய்யும் நிலை மாறி, தற்போது, 'வரலாறு பயின்றதால் பிரபலமானேன்' என சொல்லும் அளவுக்கு நிலை மாறியிருக்கிறது.
வரலாறு படிக்கும் மாணவர்களிடம் ஆய்வு நோக்கத்தை உருவாக்கும் போது, அவர்கள் ஆர்வமுடன் படிக்கின்றனர்; அந்த வகையில் தான் தற்போதைய 'சிலபஸ்' அமைந்துள்ளது. நம் கலாசாரத்தின் துவக்கத்தை வரலாறு உணர்த்துகிறது. சமஸ்கிருதம், நாகரி மொழிகளை படிக்க ஆட்கள் இல்லை. வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு, தொல்லியல் துறையில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
- பேராசிரியர் ஸ்ரீதர்,துணைத்தலைவர்
விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம்
ஈர்க்க வைத்த 'கார்ட்டூன்'
எனது, 14 வயதில், டிவி.,யில் கார்ட்டூன் பார்ப்பது வழக்கம்; 'அட்வென்சர் ஆப் ஜாக்கிசான்' என்ற கார்ட்டூன் படத்தில் தொல்லியல் பொருட்களை தேடி, 'த்ரில்' பயணம், அந்த பொருளுக்கான சண்டை போன்றவை என்னை ஈர்த்தது. தொல்லியல் துறையில் இணைந்து, தொல்லியல் ஆய்வாளராக வர வேண்டும் என்ற ஆசை வந்தது. அதனால், கல்லுாரியில் பி.ஏ., வரலாறு பாடம் தேர்வு செய்தேன். வெறும் பாடம் என்பதை கடந்து, ஒவ்வொரு நிகழ்வுகளும், பெருங்கதை போன்று உள்ளது; நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.
- அகல்யா
எல்.ஆர்.ஜி., கல்லுாரி மாணவி
வரலாறு படைக்கலாம்!
வரலாறு என்பது மிக முக்கியமான பாடம்; அதனை சுற்றிதான் மற்ற பாடங்கள் உள்ளன; வரலாறு இல்லாமல், அறிவியல் இல்லை. கலைக்கும், அறிவிலுக்கும் இடைப்பட்ட இல்லம் வரலாறு என, அறிஞர்கள் கூறியுள்ளனர். கடந்த கால மக்களின் கலாசார பிரதிபலிப்பு தான் வரலாறு. இதுபோன்ற சர்வதேச கருத்தரங்கு மிக அவசியம். வரலாற்று மாணவர்களுக்கு, சிறப்பான எதிர்காலம் உண்டு. வரலாறு, படிக்க வேண்டும்; படைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
- அஜித்குமார்
வரலாறு ஆராய்ச்சி மாணவர்அரசு கலைக்கல்லுரி, அரியலுார்.