Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நெடுஞ்சாலையா... கொடுஞ்சாலையா? மாநகராட்சி பகுதியில் 300 இடங்களில் குழி; அக்., மாதத்துக்குள் சீரமைக்க 'அட்வைஸ்'

நெடுஞ்சாலையா... கொடுஞ்சாலையா? மாநகராட்சி பகுதியில் 300 இடங்களில் குழி; அக்., மாதத்துக்குள் சீரமைக்க 'அட்வைஸ்'

நெடுஞ்சாலையா... கொடுஞ்சாலையா? மாநகராட்சி பகுதியில் 300 இடங்களில் குழி; அக்., மாதத்துக்குள் சீரமைக்க 'அட்வைஸ்'

நெடுஞ்சாலையா... கொடுஞ்சாலையா? மாநகராட்சி பகுதியில் 300 இடங்களில் குழி; அக்., மாதத்துக்குள் சீரமைக்க 'அட்வைஸ்'

ADDED : செப் 12, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பகுதியிலுள்ள நெடுஞ்சாலை ரோடுகளில், 25 கி.மீ., அளவுக்கு குண்டும் குழியுமாக இருப்பதாக, அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. திருப்பூர் மாவட்ட நெடுஞ்சாலைக்கு உட்பட்ட சாலைகளில் பராமரிப்பு, புதுப்பிப்பு பணிகள் அவ்வப்போது, நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி எல்லையில் உள்ள நெடுஞ்சாலையின் பல இடங்கள் குண்டும், குழியுமாக பல்லாங்குழி ரோடுகளாக உள்ளன.

குடிநீர் குழாய் பதிக்க, பதிக்கப்பட்ட குடிநீர் குழாய் கசிவை சரி செய்ய மற்றும் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிக்கென, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தினர் பல இடங்களில் ரோட்டோரம் தோண்டியுள்ளனர்; தோண்டப்பட்ட குழி, மூடப்படாமல் உள்ளதால், பல்லாங்குழி ரோடுகளாக மாறியுள்ளன. இதனால், வாகன போக்குவரத்துக்கும், மக்கள் நடமாடவும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

மாநகராட்சி நிர்வாகம் ரூ.6 கோடி நிலுவை



மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சியில், சேதமடைந்த சாலைகளை செப்பனிட வேண்டும் என்ற கோரிக்கையை இ-மெயில் வாயிலாகவும், நெடுஞ்சாலைத்துறையின் 'நம்ம செயலி' வாயிலாகவும், பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். அதனால், நடத்தப்பட்ட ஆய்வில், மாநகராட்சி எல்லையில் உள்ள, 200 கி.மீ., துார நெடுஞ்சாலையில், 25 கி.மீ., துார ரோடு சேதமடைந்திருக்கிறது; 300க்கும் மேற்பட்ட இடங்களில் தோண்டப்பட்ட சாலைகள் மூடப்படாததால் குழியாக இருப்பது தெரிய வந்திருக்கிறது.

தோண்டப்பட்ட ரோடுகளை மீண்டும் மூட, மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறைக்கு பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும்; ஆனால், தொகை வழங்கவில்லை. 6 கோடி ரூபாய் வரை மாநகராட்சி நிர்வாகம் நிலுவை வைத்திருக்கிறது. இதனால், நெடுஞ்சாலைத்துறையினரால் பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகத்தினர் தொகையை செலுத்தியவுடன் நெடுஞ்சாலைத்துறை சார்பில், பராமரிப்புப் பணி துவங்கி, விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விளக்கத்தை, நெடுஞ்சாலைத்துறையினர், அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரி குழு ஆய்வு


இந்நிலையில், சேதமடைந்த சாலைகளை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர் பாஸ்கர பாண்டியன் மற்றும் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் உள்ளிட்ட குழுவினர், அனுப்பர்பாளையம், காசிபாளையம், நல்லுார், ராக்கியாபாளையம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

'குழாய் பதிக்கும் பணியை, இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். சாலை சீரமைப்புப்பணிகளை, அக்., மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும்' என, திட்ட இயக்குனர் அறிவுறுத்தினார்.

தோண்டப்பட்ட ரோடுகளை மீண்டும் மூட, மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறைக்கு பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும். ஆனால், தொகை வழங்கவில்லை. 6 கோடி ரூபாய் வரை மாநகராட்சி நிர்வாகம் நிலுவை வைத்துள்ளது.


பழுதான 'அம்ருத்' திட்ட சாலைகள் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏன்?


கடந்த, 2022ல் 'அம்ருத்' திட்டத்தின் கீழ், பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த மாநகராட்சி நிர்வாகங்களின் வாயிலாக, குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணிகள் மற்றும் பாதாள சாக்கடை பணி மேற்கொள்ளப்பட்டது. திட்டப்பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்தாக வேண்டிய நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகளை, மாநகராட்சி நிர்வாகங்கள் 'விறுவிறு'வென முடித்தன.
அவ்வாறு, புதுப்பிக்கப்பட்ட சாலையோரம் தான், குடிநீர் குழாய், பாதாள சாக்கடைக்கான குழாய் பதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் அடிக்கடி ஏற்படும் பழுது, கசிவு ஆகியவற்றை சரி செய்ய, சாலையை தோண்டும் பணியை மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டன. தோண்டப்பட்ட சாலையை செப்பனிடும் பொறுப்பு, நெடுஞ்சாலைத்துறைக்கே உண்டு என்ற போதிலும், அதற்கான செலவின தொகையை மாநகராட்சி நிர்வாகங்கள், செலுத்த வேண்டும். விதிமுறைப்படி, சாலையை தோண்ட முன்கூட்டியே நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்று, அதற்கான இழப்பீடு தொகையை செலுத்திய பின்னர் தான், சாலையை தோண்டும் பணியை மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், உள்ளாட்சி நிர்வாகத்தினர், நெடுஞ்சாலைத்துறையிடம் எவ்வித அனுமதியையும் பெறாமல், இழப்பீடு தொகையையும் செலுத்தாமல், சாலையை தோண்டி பணி மேற்கொண்டனர். அவ்வாறு தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும்மீண்டும் தோண்டப்படுவதால், பழுது பார்க்கப்படாததால், பல இடங்களில் சாலை சிதிலமடைந்து, விபத்து மற்றும் நெரிசலை ஏற்படுத்தி வருகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us