ADDED : பிப் 24, 2024 12:09 AM
திருப்பூர்:பெருமாநல்லுாரில் பிரசித்திபெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, மார்ச் மாதம் நடைபெற உள்ளது. கடந்தாண்டு இக்கோவில் திருவிழாவின்போது, குண்டம் இறங்கிய பக்தர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இந்தாண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குண்டம் திருவிழாவை நடத்தவேண்டியது அவசியமாகிறது.
சமூக ஆர்வலர் சரவணன் என்பவர், கலெக்டரிடம் அளித்த மனு:
கடந்தாண்டு, கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், குளறுபடிகள் காரணமாக பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. குண்டம் இறங்கிய பக்தர்கள் பலரும் தீக்காயம் அடைந்தனர். நடப்பாண்டு, குண்டம் திருவிழா, அடுத்த மாதம், 26ம் தேதி நடைபெறுகிறது.
குண்டம் திருவிழா சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற, மாவட்ட நிர்வாகமும், ஹிந்து அறநிலையத்துறை, போலீசார் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். குண்டம் இறங்கும் பக்தர்கள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு இழப்பீடு வழங்க, 5 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு செய்யப்படவேண்டும்.
இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளார்.