Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 5, 10 கிலோ அரிசிக்கு ஜி.எஸ்.டி., விலக்கு

5, 10 கிலோ அரிசிக்கு ஜி.எஸ்.டி., விலக்கு

5, 10 கிலோ அரிசிக்கு ஜி.எஸ்.டி., விலக்கு

5, 10 கிலோ அரிசிக்கு ஜி.எஸ்.டி., விலக்கு

ADDED : செப் 12, 2025 10:38 PM


Google News
திருப்பூர்; ஏழைகளின் சிரமம் குறையும் வகையில், 5, 10 கிலோ அரிசிக்கான, 5 சதவீத ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

மத்திய நிதி அமைச்சரகம், ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் இருக்கும் சிரமங்களை குறைக்கும் வகையில், மறுசீரமைப்பு செய்துள்ளது, நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என்று இருந்தது, 5 மற்றும் 18 என, இரண்டு பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த போது, 25 கிலோ வரையில் அரிசி விற்கும் போது, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டது; இதனால், 5 மற்றும் 10 கிலோ அரிசி பைகளின் விலை உயர்ந்துள்ளது. பொதுமக்கள் வசதிக்காக, 25 கிலோ சிப்பம் என்பது, 26 கிலோ சிப்பமாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம், ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு செய்யும் போது, அத்தியாவசிய உணவு பொருளாகிய அரிசிக்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி.,ல் விலக்கு அளிக்கப்படுமென நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இருப்பினும், இதுதொடர்பான அறிவிப்பு இல்லாததால், மத்திய அரசு கருணை காட்ட வேண்டும்; 5 சதவீத வரியில் இருந்து விலக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர், பல்லடம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் துரைசாமி கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகள், இந்திய உணவு கழகம் வாயிலாக அரிசியை வாங்கி, மக்களுக்கு பொதுவினியோக திட்டத்தில் வழங்கி வருகிறது.

பொதுமக்கள், தேவையான கூடுதல் அரிசியை, சந்தையில் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களும், நடுத்தர மக்களும் தேவையான அரிசியை, 5, 10 கிலோ வாங்கி பயன்படுத்துகின்றனர். மத்திய அரசு, 5, 10 மற்றும் 25 கிலோ அரிசி பைக்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு செய்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; வரி விலக்கு அளித்து, பாதிப்பை நீக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி., கவுன்சில் நடக்கும் போதெல்லாம், இந்திய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர் கூட்டமைப்பு சார்பில், வரிவிலக்கு கோரி கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், 13 மாநில அரசுகளும் அரிசிக்கான, 5 சதவீத வரியை நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். நடுத்தர ஏழை மக்களின் துயர் துடைக்கும் வகையில், அரிசிக்கான 5 சதவீத ஜி.எஸ்.டி.,யை முழுமையாக நீக்க வேண்டுமென, மத்திய நிதியமைச்சர் சீதாராமனுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us