/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மலைப்பகுதிகளில் திரும்பியது பசுமை! கோடையை சமாளிக்கலாம்; வனத்துறை நம்பிக்கைமலைப்பகுதிகளில் திரும்பியது பசுமை! கோடையை சமாளிக்கலாம்; வனத்துறை நம்பிக்கை
மலைப்பகுதிகளில் திரும்பியது பசுமை! கோடையை சமாளிக்கலாம்; வனத்துறை நம்பிக்கை
மலைப்பகுதிகளில் திரும்பியது பசுமை! கோடையை சமாளிக்கலாம்; வனத்துறை நம்பிக்கை
மலைப்பகுதிகளில் திரும்பியது பசுமை! கோடையை சமாளிக்கலாம்; வனத்துறை நம்பிக்கை
ADDED : ஜன 08, 2024 01:13 AM

உடுமலை:வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள, தடுப்பணைகள், வன விலங்குகளுக்கான குடிநீர் தொட்டிகள் நிரம்பி வழிவதால், கோடை காலத்தில் சிக்கல் ஏற்படாது, என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்களில், விலங்குகளின் குடிநீர் தேவைக்காக, காட்டாறுகள், ஓடைகளின் குறுக்கே, 80க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், வன விலங்குகளின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், 40க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகளும், உடுமலை, அமராவதி வனச்சரகங்களிலும், தலா ஐந்து தொட்டிகளுக்கு, போர்வெல் மற்றும் சோலார் மின் மோட்டாருடன் அமைக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக, தண்ணீர் தேவைக்காக, தாவர உண்ணிகள், உடுமலை - மூணாறு ரோட்டை கடந்து, அமராவதி அணைக்கு வந்து செல்வது வழக்கம். கடந்தாண்டு, தென்மேற்கு பருவமழை குறைவு காரணமாக, வனப்பகுதிகளில் வறட்சி நிலை காணப்பட்டது.
இந்நிலையில், ஆண்டு இறுதியில் டிச., மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் தற்போது பெய்யும் குளிர் கால மழை காரணமாக, மலைப்பகுதிகளில் பசுமை திரும்பியுள்ளது.
மேலும், வனப்பகுதிகளிலுள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஓடைகள், காட்டாறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பியுள்ளன. குடிநீர் தொட்டிகளிலும், மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால், வரும் கோடை காலத்தில், வனப்பகுதிகளில் வறட்சி ஏற்படாது. வன விலங்களுக்கு தேவையான குடிநீர், உணவு ஆகியவை உள்ளதால் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை.
வனத்துறையினர் கூறுகையில், 'கோடை காலத்தில் குடிநீர் தேவைக்காக, வன விலங்குகள், தண்ணீர் தேடி அமராவதி அணைக்கு வரும். உடுமலை - மூணாறு ரோட்டை கடந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
இந்தாண்டு, வனப்பகுதிகளுக்குள் நீர் இருப்பதால், ரோட்டை கடப்பது குறையும். இருப்பினும், வழக்கமான வழித்தடத்தில் வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால், கண்காணிப்பும் தொடரும்,' என்றனர்.