Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பசுமை நிறைந்த நினைவுகளே... இளைஞராக மாறி ஆடிப்பாடி மகிழ்ந்த தாத்தா - பாட்டிகள்

பசுமை நிறைந்த நினைவுகளே... இளைஞராக மாறி ஆடிப்பாடி மகிழ்ந்த தாத்தா - பாட்டிகள்

பசுமை நிறைந்த நினைவுகளே... இளைஞராக மாறி ஆடிப்பாடி மகிழ்ந்த தாத்தா - பாட்டிகள்

பசுமை நிறைந்த நினைவுகளே... இளைஞராக மாறி ஆடிப்பாடி மகிழ்ந்த தாத்தா - பாட்டிகள்

ADDED : செப் 07, 2025 07:31 AM


Google News
Latest Tamil News
'ப சுமை நிறைந்த நினைவுகளே...' என்ற அந்த பாடலை பாடி மகிழ்ந்த திரை பிரபலங்கள் இன்று நம் மத்தியில் இல்லாத நிலையிலும் பல ஆண்டுகளை கடந்தும் கூட, அந்தப்பாடல் வரிகள் மட்டுமின்றி, வலி மிகுந்த வார்தைகளும், இன்றும் பலரின் மனங்களில் நிறைந்துள்ளது.

குடும்பம், உறவினர்கள் என்ற இலக்கை எல்லாம் கடந்து, நண்பர்கள் என்ற வட்டம் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எந்த நிலையிலும் எந்த தரப்பினரும் எல்லையில்லா ஆனந்தத்தை தரும் உறவாக காலம் காலமாக உள்ளது.

அதேபோல் தான் எண்ணங்களும். சிறிய வயதில், எத்தனையோ ஆண்டுகள் முன்பு நாம் உணர்ந்த ஒரு அன்பை, பாசம், நேசம் உள்ளிட்ட உணர்வுகளை ஒன்றடக்கியதாகத் தான் நட்பு என்பது. அந்த நட்பு உறவுகள் மனதில் உள்ள எண்ணங்களையும், உண்பதையும், உடை உள்ளிட்ட அணிகலன்களை பகிர்ந்து கொள்வதிலும் கொள்ளைப் பிரியம் கொண்டது.

பள்ளி செல்லும் சிறுவனாக, கல்லுாரி செல்லும் மாணவராக, வேலைக்கு செல்லும் இளைஞனாக, திருமணம் முடித்த குடும்பஸ்தனாக, மழலைகள் பெற்றெடுத்த பின் பொறுப்பு மிக்க பெற்றோராக, அவர்களை வளர்த்து ஆளாக்கிய பின் ஓய்வு என்பதை ஏற்றுக் கொள்ளும் வயதில் பெரும் ஏக்கம் ஏற்படும். அது தான் வயது மூப்பு.

இந்த நிலையில் ஒரு சில முதியவர்கள் தங்கள் மகன், மகள்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்து மகிழ்ந்திருப்பர். வயது மூப்பு காரணமாக சில முதியவர்களுக்கு அவர்கள் பெற்ற வாரிசுகள் உதவிகள் செய்வர்.

எந்த நிலையில் உள்ள முதியவராக இருந்தாலும் அவர்கள் தங்கள் வயதுடைய நண்பர்களைப் பெற்றிருந்தால், பெரும் வரம். அந்த வரம் சிலருக்கு வாய்த்திருக்கும்; பலருக்கு வாய்த்திருக்காது. அவ்வகையில் தங்கள் வயதுடைய அறிமுகமான நண்பர்களை, அறிமுகமில்லாத புதிய நபர்களை ஒன்றிணைத்து வயதான அவர்களை ஒரு நாள் சந்தித்து பேசி ஒன்று கூடி ஒரு விழாவாக நடத்தினால் எப்படி இருக்கும்.

அந்த யோசனையைத் தான் செயல்படுத்தியது, திருப்பூரில் இயங்கும் காமாட்சியம்மன் மகளிர் பேரவை. கடந்தாண்டு துவங்கப்பட்ட இதில் தற்போது 300க்கும் மேற்பட்ட மகளிர் உறுப்பினராக உள்ளனர். இவ்வமைப்பு சார்பில், அதன் உறுப்பினர்கள் தங்கள் வீடுகளில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் தங்களுக்கு தெரிந்த வீடுகளில் உள்ள முதியோர்களை ஒரு நாள் ஒன்று கூடி பேசி, சிரித்து, ஆடிப்பாடி மகிழ்ந்திருக்க வைக்க திட்டமிட்டனர்.

நிகழ்ச்சி... நெகிழ்ச்சி! அந்த திட்டம் நேற்று 'பசுமை நிறைந்த நினைவுகளே' என்ற தலைப்பில், மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, ஸ்ரீ காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் அரங்கேறியது. இதில், காமாட்சியம்மன் மகளிர் பேரவை உறுப்பினர்கள் தங்கள் குடும்பம் மற்றும் உறவினர்கள் குடும்பங்களைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்டோர் 350 பேரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தனர்.

பாவை, அனந்திகா, தீக் ஷித், அபிரவ், சஷ்டிகா ஆகியோர் கடவுள் வாழ்த்து பாடி துவக்கி வைத்தனர். பேரவை தலைவர் மீனாமுரளி வரவேற்றார். பரதநாட்டிய நிகழ்ச்சியும், உளவியல் மருத்துவர் அய்யப்பன் சிறப்பு விழிப்புணர்வு உரையும் நடந்தது. அமைப்பின் கவுரவ தலைவர் பத்மா சிவலிங்கம் தலைமையில்,'பாடுவோர் பாடலாம்' நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற முதியவர்கள் சிலர்தங்கள் விருப்ப பாடல்களை பாடி அனைவரின் பாராட்டை அள்ளினர்.

மதிய உணவுக்கு பின் இன்னிசை கச்சேரி நடந்தது. இதனை ரசித்த முதியோர் தங்கள் வயது நண்பர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மணமாலை டிரஸ்ட் ஸ்ரீனிவாசன், சங்குராஜ், உமா சீனிவாசன், நிர்மலா செல்வராஜ் ஆகியோர் நிகழ்ச்சியை நிறைவு செய்து பேசினர்.

விழாவில், மன நிறைவுடன் கலந்து கொண்ட முதியவர்கள் மீண்டும் இது போன்ற தருணங்களை தங்களுக்கு ஏற்படுத்தி தருமாறு வேண்டுகோள் விடுத்து பிரிய மனமின்றி கலைந்து சென்றனர். நெகிழ்ச்சியான இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காமாட்சி அம்மன் மகளிர் பேரவையினருக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us