Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசுப்பள்ளி வளாகம் ஆக்கிரமிப்பு; பூசாரிக்கு வீடானது வகுப்பறை: கோவில் நிர்வாகம் அத்துமீறல்

அரசுப்பள்ளி வளாகம் ஆக்கிரமிப்பு; பூசாரிக்கு வீடானது வகுப்பறை: கோவில் நிர்வாகம் அத்துமீறல்

அரசுப்பள்ளி வளாகம் ஆக்கிரமிப்பு; பூசாரிக்கு வீடானது வகுப்பறை: கோவில் நிர்வாகம் அத்துமீறல்

அரசுப்பள்ளி வளாகம் ஆக்கிரமிப்பு; பூசாரிக்கு வீடானது வகுப்பறை: கோவில் நிர்வாகம் அத்துமீறல்

ADDED : ஜூன் 16, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
அவிநாசி; அவிநாசி அருகே தனியார் கோவில் நிர்வாகத்தினர் அரசு பள்ளி கட்டடத்தை ஆக்கிரமித்ததால், மாணவர்கள் கல்வி கற்க கேள்விக்குறியாகி உள்ளது.

அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. அதே வளாகத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் கட்டடத்தில் ஒன்று முதல் 3ம் வகுப்பு வரையிலும், அதன் அருகிலேயே நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் வகுப்பறைகளும் இருந்தன. இதையொட்டி 25 குழந்தைகள் படித்து வந்த அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வந்தது.

கடந்த 2018ல், வேலாயுதம்பாளையத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு, துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மாற்றப்பட்டு பள்ளிகள் ஒன்றிணைக்கப்பட்டது.

கோவில் வளாகமாகமாறிய பள்ளிக்கட்டடம்


பள்ளிக்கு அருகில் உள்ள தனியார் நிர்வாகம் மூலம் நடத்தப்பட்டு வரும் பாலமுருகன் கோவிலில் புனரமைப்பு வேலைகள் நடைபெறுவதாக கூறி, அருகில் காலியாக இருந்த பள்ளி கட்டடத்திற்கு அங்கன்வாடி குழந்தைகளை மாற்றம் செய்தனர். கோவிலை சுற்றிலும் மதிற்சுவர் கட்டியபோது அங்கன்வாடி மையம் மற்றும் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புக்குரிய வகுப்பறைகள் கொண்ட அரசு பள்ளி கட்டடத்தைச் சுற்றிலும் மதில் சுவர் எழுப்பி கோவில் வளாகமாக மாற்றினர்.

தற்போது அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் பள்ளி கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் மழைக்காலங்களில் வகுப்பறைகள் முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கிறது.

பூசாரிக்கு வீடானதுபள்ளி வகுப்பறை


பள்ளி கட்டடத்தில் அங்கன்வாடி மையமாக செயல்படுவதால்,குழந்தைகளுக்கு உணவு சமைப்பதற்கு என்று தனி சமையலறை இல்லாமல் வகுப்பறையிலேயே சமையல் செய்யும் அவல நிலை உள்ளது. அங்கன்வாடி மையத்தைச் சுற்றிலும்,செடிகள் முளைத்து புதர்களாக உள்ளதால் அவ்வப்போது பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளும் ஜன்னல் வழியாக வகுப்பறைக்குள் நுழைந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது.

இதனால் பெற்றோர்களும் குழந்தைகளை மையத்திற்கு அனுப்ப தயங்குகின்றனர்.

கடந்த ஆறு ஆண்டுகளாக கோவிலில் பூஜை செய்யும் பூசாரி பள்ளி வகுப்பறையை வீடாக பயன்படுத்தி குடும்பம் நடத்தி வருகிறார்.

பி.டி.ஓ., விஜயகுமாரிடம் (கிராமம்) கேட்டதற்கு, ''அலுவல் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மீட்டிங்கில் இருக்கிறேன். இதுகுறித்து தகவல் வந்துள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு கட்டடங்கள் மீட்கப்படும்,'' என தெரிவித்தார்.

வேலாயுதம்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான அங்கன்வாடி மையக் கட்டடம் தனியார் கோவில் நிர்வாகம் மூலம் ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது குறித்து தாசில்தார், பி.டி.ஓ., ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நேரில் சென்று ஆய்வு செய்து அங்கன்வாடி மைய கட்டடத்தில், குழந்தைகள் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- சரஸ்வதி, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us