Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாடகைக்கு விடப்படும் அரசின் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்

வாடகைக்கு விடப்படும் அரசின் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்

வாடகைக்கு விடப்படும் அரசின் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்

வாடகைக்கு விடப்படும் அரசின் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்

ADDED : மே 24, 2025 06:19 AM


Google News
திருப்பூர், அரசின் அடுக்குமாடி குடியிருப்புகள், விதிமீறி வாடகைக்கு விடப்படுகின்றன; இதை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.

தமிழக அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றன. வீடில்லாத ஏழை, எளிய மக்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், நீர்நிலை மற்றும் ஓடை புறம்போக்கில் வசிக்கும் மக்கள் உள்ளிட்டோருக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்படுகின்றன.

அரசு நிர்ணயிக்கும் பங்களிப்பு தொகையை செலுத்தி, வீடுகளை அவர்கள் சொந்தமாக்கி கொள்ளலாம். அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆயிரக்கணக்கில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த குடியிருப்பில் ஒவ்வொரு வீடும், 400 சதுர அடி பரப்பளவில், ஒரு சமையலறை, படுக்கை அறை, ஹால், குளியல் மற்றும் கழிப்பிட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

வீடுகளை பெற்ற பயனாளிகள் பலர் ஏற்கனவே, சற்று வசதியான வீடுகளில் வசிக்கும் நிலையில், அந்த வீடுகளை காலி செய்ய மனதில்லாமல் அடுக்குமாடி குடியிருப்பிலும் வீடு வாங்கி பூட்டி வைத்துக் கொள்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகளை பெற்ற பலர், வெளியூரிலும் வசிக்கின்றனர். இதனால், அந்த வீடுகளை, அதிகபட்சம், 3,000 முதல், 3,500 ரூபாய் வரை வாடகைக்கும் விடுகின்றனர். இது, அதிகாரிகளின் கவனத்துக்கு புகாராகவும் கொண்டு செல்லப்படுகிறது.

அதிகாரிகள் கூறியதாவது:

அடுக்குமாடி குடியிருப்புகளை பெறும் பயனாளிகள், அங்கு தான் வசிக்க வேண்டும். அதனை வாடகைக்கு விடுவதோ, பிற பயன்பாட்டுக்கு அனுமதிப்பதோ சட்டப்படி குற்றம். அவ்வாறு வாடகைக்கு விடப்படும் வீடுகளில் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' ஒட்டப்படுகிறது.

வாடகைக்கு விடப்படும் வீடுகளை பயனாளிகளிடம் இருந்து திரும்ப பெறவும் சட்டத்தில் வழியுண்டு. இருப்பினும், பயனாளிகள் பலர், அதிகாரிகளுக்கு தெரியாமல் வீடுகளை வாடகைக்கு விடுகின்றனர்.

கள ஆய்வுக்கு வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்கள் செல்லும் போது, 'பயனாளி, தங்கள் உறவினர் தான்' என்பது போல், ஏதோ ஒரு கார ணம் சொல்லி சமாளிக்கின் றனர். இதனால், எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையே உள்ளது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us