ADDED : ஜன 05, 2024 01:35 AM

திருப்பூர்;'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டிய பஸ் ஸ்டாண்டில், கழிப்பிடம் உரிய பராமரிப்பின்றி 'நாறி' வருவதால், பயணிகள் பயன்படுத்த முடியாமல் அவஸ்தைப்படுகின்றனர்.
திருப்பூர், காமராஜ் ரோட்டில், மத்திய பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் கட்டியுள்ள இந்த வளாகத்தில், வெளிப்பகுதியில் இலவச சிறுநீர் கழிப்பிட வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் உரிய பராமரிப்பின்றி, குப்பை கூளம் தேங்கியும், தண்ணீர் வசதியின்றியும் காணப்படுகிறது.
ஒரு சில உபகரணங்கள் உடைந்தும் முறையாக கழிவுகள் வெளியேற வழியின்றி அவதியை ஏற்படுத்துகிறது. கடும் துர்நாற்றமும் வீசுவதால், பயணிகள் மூக்கைப் பொத்திக் கொண்டு தான் சென்று வர வேண்டியுள்ளது.
துர்நாற்றம் தாங்காமல் சிலர் கழிப்பிடத்துக்கு வெளியே திறந்த வெளியிலும், அருகேயுள்ள மறைவான இடத்தையும் பயன்படுத்துகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதுமே கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்தும், சேதமான குழாய்கள் பொருத்தியும், பராமரிக்க வேண்டும்.