/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மலையடிவாரத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளால் வனச்சூழல் பாதிப்பு! கோட்ட குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை மலையடிவாரத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளால் வனச்சூழல் பாதிப்பு! கோட்ட குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
மலையடிவாரத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளால் வனச்சூழல் பாதிப்பு! கோட்ட குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
மலையடிவாரத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளால் வனச்சூழல் பாதிப்பு! கோட்ட குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
மலையடிவாரத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளால் வனச்சூழல் பாதிப்பு! கோட்ட குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
ADDED : மார் 25, 2025 10:19 PM

உடுமலை; மேற்கு தொடர்ச்சிமலையடிவார பகுதியில், அரசுத்துறைகளுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளதால், வனச்சூழல் பாதிப்பதோடு, வன விலங்குகளும் வழித்தடம் மாறி வருவதால் பாதிப்பு ஏற்படுவதாக, குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.
உடுமலையில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடந்தது. அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் பேசியதாவது:
மேற்கு தொடர்ச்சிமலையில், திருமூர்த்திமலை அடிவாரப்பகுதிகளில், தளி, திருமூர்த்திநகர், பொன்னாலம்மன்சோலை மற்றும் திருமூர்த்தி அணை நீர் தேங்கும் பரப்பில் பல நுாறு ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
மலையடிவாரத்தில் துவங்கி, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வெளிச்சுற்று பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், ஓடைகள், கல்லாங்குத்து வாரி, மலைக்கரடுகள் என இருந்த அரசு நிலங்களில், பல்வேறு வகையான மரங்களும், செடி, கொடிகள் என பசுமையாக இருந்தன.
அவற்றை அழித்து, தென்னை மரங்களாகவும், ரிசார்ட்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. மேலும், சுற்றிலும் கம்பி வேலி அமைத்து, சட்ட விரோதமாக மின்சார வேலிகளாகவும் மாற்றப்படுகிறது.
பாரம்பரியமாக யானைகள் மற்றும் வன விலங்குகள் உணவு, குடிநீர், ஓய்வுக்கு பயன்படுத்தி வந்த நிலங்கள், வழித்தடம் அழிக்கப்பட்டுள்ளதால், வனச்சூழல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
வன விலங்குகளும் பாதிப்பதோடு, உணவு, குடிநீருக்காக விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகின்றன. மலையடிவார பகுதிகளில் வாழ்ந்த, நரிகள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள், பறவை இனங்கள் அழிந்து விட்டன.
மயில்கள், முள்ளம்பன்றிகள், காட்டுப்பன்றிகள் பல கி.மீ., துாரத்திற்கு பரவி, விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
எனவே, திருமூர்த்திமலையடிவார பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, மலையடிவாரத்திலிருந்த, வனச்சூழல் மற்றும் பல்லுயிரின பாதுகாப்பை மீண்டும் உருவாக்க வருவாய்த்துறை, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஏ.பி., திட்டத்தின் ஆதாரமாக உள்ள காண்டூர் கால்வாயில், வன விலங்குகள் நீர் அருந்த ஒரு பகுதியில் சரிவு அமைப்பு இருந்தது.
தற்போது புதுப்பிக்கப்பட்டபோது, அவை அகற்றப்பட்டதால், தற்போது வன விலங்குகள் தண்ணீர் குடிக்க முயற்சிக்கும் போது, கால்வாயில் விழுந்து பலியாகும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால், வன விலங்குகளுக்கு குடிநீர் வசதி செய்து தருவதோடு, காண்டூர் கால்வாயில் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
சந்தையில் கட்டணக்கொள்ளை
உடுமலை நகராட்சி வாரச்சந்தையில், கமிஷன் மண்டி உரிமையாளர்கள் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதோடு, நுழைவு கட்டணம், கமிஷன் என கட்டணக்கொள்ளை நடக்கிறது.
மேலும், காய்கறி கழிவுகள் முறையாக அகற்றப்படாமல், சுகாதார கேடு ஏற்படுகிறது. சந்தை வணிக வளாகத்தில், மாடு, ஆட்டுக்கறி, மீன் கடைகள் அதிகளவு காணப்படுவதால், காய்கறி சந்தை, இறைச்சி சந்தையாக மாறியுள்ளது. இதனை முறைப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.