Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மீன் விற்பனை மந்தம்

மீன் விற்பனை மந்தம்

மீன் விற்பனை மந்தம்

மீன் விற்பனை மந்தம்

ADDED : ஜூலை 22, 2024 12:06 AM


Google News
திருப்பூர்:மழை குறைந்து, அனைத்து பகுதிகளில் இருந்தும், மீன் வரத்து இயல்புக்கு திரும்பிய நிலையில், திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு, 60 டன் மீன்கள் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

கடந்த இரு வாரங்களை போலவே நடப்பு வாரமும் மீன் விலை குறைவாக இருந்தும், மீன்களை வாங்கி செல்ல வாடிக்கையாளர்கள் குறைவாக வந்தனர். நேற்று பவுர்ணமி என்பதால் எதிர்பார்த்த விற்பனை இல்லை என மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

-----

மரக்கன்று நடும் விழா

திருப்பூர், ஜூலை 22-

'டிரீம்-20' பசுமை அமைப்பு சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' மற்றும் 'பி - மில் வாக்கர்ஸ் கிளப்' உடன் இணைந்து, மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.

ஊத்துக்குளி ரோடு, புதிய மேம்பாலம் அருகில், மாநகராட்சி பூங்கா இடத்தில், மூங்கில் மற்றும் பிற மரக்கன்றுகள் நடப்பட்டன. நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, மரக்கன்றுகள் நட்டனர்.

'பூமியை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம்', 'வீடுகளில் சேகரமாகும் குப்பையை தரம் பிரித்து வழங்குவோம்' என்று உறுதிமொழி ஏற்றனர். வரும் நாட்களில், காலியிடங்களில் மரக்கன்று நட்டு வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.

----

பேரவைக்கூட்டம்

திருப்பூர்:

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் அவிநாசி உட்கோட்ட சாலை பணியாளர் சங்க 9வது உட்கோட்ட பேரவை கூட்டம் நடந்தது.

சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டையொட்டி மாநில பிரதிநிதித்துவ பேரவையை சிறப்பு மாநில மாநாடாக முன்னெடுப்பது; சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்தி தருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உட்கோட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சிவசாமி வரவேற்றார்.

கோட்ட இணைச்செயலாளர் விஸ்வநாதன் துவக்க உரை நிகழ்த்தினார். உட்கோட்ட செயலாளர் முருகேசன் செயலாளர் அறிக்கை வாசித்தார். பொருளாளர் வெங்கிட்டான், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் சின்ராஜ், வட்டார தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

---

மருந்துக்கடை 'சீல்'வைப்பு

திருப்பூர், ஜூலை 22-

திருப்பூர், சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர், செல்வமணி, 21. இவரது நண்பர் கோகுல், 23, வலி நிவாரண ஊசி வாங்கி, செல்வமணிக்கு கையில் செலுத்தியுள்ளார். மங்கலம் போலீசார் செல்வமணி, கோகுல் ஆகியோரிடம் விசாரித்த போது, மங்கலம் ரோடு, குளத்துப்புதுாரில் உள்ள மருந்துக்கடை ஒன்றில் அதிகளவில் வலி நிவாரண மாத்திரை, ஊசிகளை வாங்கியது தெரிந்தது.

கோவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குனர் குருபாரதி உத்தரவில், மருந்துகள் கட்டுப்பாட்டு அலுவலர் ராமசாமி மற்றும் அதிகாரிகள் மருந்து இருப்பு குறித்து ஆய்வு நடத்தினர்.

இதில் மணிகண்டன் என்பவர் கடை நடத்தி வந்ததும், உரிய ஆவணங்கள் இல்லாமல் அதிகளவில் மருந்துகளை இருப்பு வைத்திருந்ததும் தெரிய வந்தது. மேலும் மருந்துகள் விற்பனையை தடுக்க, மருந்துக்கடைக்கு பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.

---

மத்திய பட்ஜெட் மீது தொழில்துறை எதிர்பார்ப்புகள்

திருப்பூர், ஜூலை 22-

பசுமை ஆற்றல் உற்பத்தி மானிய திட்டம், அவசர கால கடன் திட்டம், வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடு என மத்திய பட்ஜெட்டில், பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, திருப்பூர் பின்னலாடைத்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாளை (23ம் தேதி) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில், நாட்டில் அன்னிய செலாவணியை அதிகம் ஈர்க்கும், பின்னலாடை தொழில்துறையினர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அறிவிப்புகள் இடம்பெறுமா என்று, தொழில்துறையினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கொரோனாவுக்கு பிறகு, மீண்டு எழுந்த பின்னலாடை தொழில், பலகட்ட சோதனைகளால் ஸ்தம்பித்தது. இருப்பினும், தொழில்துறையினரின் விடாமுயற்சியால், தட்டுத்தடுமாறி இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.

ஆடை இறக்குமதி

கட்டுப்பாடு தேவை

மத்திய பட்ஜெட்டில், பின்னலாடை துறையினரின் எதிர்பார்ப்புகள்:

* தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம், 2022 மார்ச் மாதத்துக்கு பிறகு நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக, இத்திட்டத்தை மீண்டும் முன்தேதியிட்டு அறிவிக்க வேண்டும்; நிலுவை மானியத்தை விடுவிக்க வேண்டும்.

* 'பி.எல்.ஐ., -2.0' திட்டத்தை, திருத்திய விதிமுறைகளுடன், குறைந்தபட்ச முதலீட்டின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.

* பிரிட்டன், ஐரோப்பியா, நியூசிலாந்து மற்றும் வளைகுடா நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்.

* வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடு.

* 'பேக்கிங் கிரெடிட்' மீதான வட்டி மானியத்தை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 5 சதவீதமாகவும்; மற்ற நிறுவனங்களுக்கு, 3 சதவீதமாகவும் உயர்த்த வேண்டும்.

அவசர கால கடன்

திட்ட செயல்பாடு

* மின் கட்டண சுமையை குறைக்கும் வகையில், பசுமை ஆற்றல் உற்பத்திக்கான மானிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

* கொரோனா காலத்தில் வழங்கியது போல், அவசரகால கடன் திட்டம் மீண்டும் ஒருமுறை செயல்படுத்தப்பட வேண்டும்.

* சர்வதேச சந்தை வாய்ப்புகளை கூடுதலாக கைப்பற்ற, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு திருப்பூர் மாறியாக வேண்டும். அதற்கு வழிகாட்டும் வகையில், புதிய ஆராய்ச்சி மையம் திருப்பூரில் அமைய வேண்டும். புதிய தொழில் துவங்க முதலீட்டு மானியம் வழங்க வேண்டும்.

* பருத்தி உற்பத்தியை பெருக்குவதுடன், பஞ்சு இறக்குமதி வரி, 11 சதவீதத்தை முற்றிலும் நீக்க வேண்டும்.

* தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறையினர் பயன்பெறும் வகையில், தேசிய பின்னலாடை தொழில் வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும்.

*

உள்கட்டமைப்பு மேம்பாடு

நம்பிக்கை மெய்ப்படட்டும்

திருப்பூரில் இருந்து ஈட்டப்படும் அன்னிய செலாவணி வருவாயில், 1 சதவீதத்தை, நகர உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்க வேண்டும்.

வஞ்சிபாளையத்தில் கூட்ஸ் ெஷட் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கோவை, நீலம்பூர் வரை அமையும் மெட்ரோ ரயில் சேவையை, திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும்.

திருப்பூர் பகுதியில், சிறப்பு பாடப்பிரிவுகளுடன் கூடிய, , பின்னலாடை தொழில் சார்ந்த ஐ.ஐ.டி., அமைக்க வேண்டும்.

குறிப்பாக, நலிவு நிலையில் உள்ள பின்னலாடை தொழில்களுக்கு, உயிர் கொடுக்கும் வகையிலான, நிதி ஆதார அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த திருப்பூர் தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு.

------------

பஸ்கள் வராவிட்டால்

நாளை மறியல்

அனுப்பர்பாளையம், ஜூலை 22-

திருப்பூர், காவிலிபாளையம் மற்றும் காவிலிபாளையம் புதுார் வழித்தடங்களில் 39 மற்றும் 47 டி ஆகிய இரு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

அப்பகுதியில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிக்காக ரோடு தோண்டப்பட்டது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நிறைவு பெற்று ரோடும் புதுப்பிக்கப்பட்டது. ஆனாலும் நிறுத்தப்பட்ட பஸ்கள் இயக்கப்படவில்லை. குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

பஸ் வசதி இல்லாததால், காலை மாலை இரு வேளையும் 20 ரூபாய் கொடுத்து ஷேர் ஆட்டோவில் செல்கின்றனர். பனியன் நிறுவன தொழிலாளர்களும் தவிக்கின்றனர். காவிலிபாளையத்தில் மருத்துவமனையும், காவிலிபாளையம் புதுாரில் தொடக்கப்பள்ளியும் உள்ளது.

மக்கள் நடந்தே செல்ல வேண்டியுள்ளது. பஸ்களை இயக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் நாளை(23ம் தேதி) சிறு பூலுவபட்டியில் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர்.

----

குழாய் உடைப்பு

குடிநீர் வீண்

திருப்பூர், ஜூலை 22-

திருப்பூர் நொய்யல் ஆற்றை ஒட்டி, வளம் பாலம் பகுதியில் செல்லாண்டியம்மன் துறை அமைந்துள்ளது.

இந்த பாலம் அருகே, ரோட்டோரம் குடிநீர் வினியோக குழாய்கள் பதித்து மாநகராட்சி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.செல்லாண்டியம்மன் துறை அடுக்கு மாடிக் குடியிருப்பு அருகே இந்த குழாய் உடைந்து கடந்த சில நாட்களாக குடிநீர் பெருமளவு வெளியேறுகிறது.

உடைப்பிலிருந்து வெளியேறும் குடிநீர் ரோட்டில் சென்று பாய்ந்தும் பெரும் அவதி நிலவுகிறது. ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள ரோடு தற்போது தண்ணீர் தேங்கி நிற்பதால் மேலும் சேதமாகி வருகிறது. குழாய் உடைப்பு சரி செய்து குடிநீர் வீணாவது தடுக்கப்பட வேண்டும்.

---

நன்றி தெரிவிப்பு கூட்டம்

திருப்பூர், ஜூலை 22-

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகளுக்கு தேர்தலையொட்டி நன்றி தெரிவிப்பு கூட்டம் நடந்தது.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் நேற்று திருப்பூரில் நடந்தது. திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டசபைக்கு உட்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநில பொது செயலாளர் முருகானந்தம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

மாநில செயலாளர் மலர்கொடி, மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றன்ர. அதில், தேர்தலில் களப்பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. வரும் தேர்தல்களை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகள் பேசினர்.

----

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு விருது

பல்லடம் ஜூலை 22--

சூலுார் தாலுகா, சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், செஞ்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைந்துள்ளது.

இதன் ஆண்டு பொதுக்கூட்டம் செஞ்சேரிமலையில் நடந்தது. தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

வங்கி கோவை மாவட்ட துணை மேலாளர் திருமலை ராவ் முன்னிலை வகித்தார். செஞ்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளார் ஆசி வழங்கினார்.

செயலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், 'கடந்த ஆண்டு, 20 உறுப்பினர்களுடன் உழவர் உற்பத்தி நிறுவனம் துவங்கப்பட்டது.

இன்று, 750 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்துக்கு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், நபார்டு வங்கி மூலம் சிறந்த உழவர் உற்பத்தி நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஒரு லட்சம் வருவாய் கிடைத்த நிலையில், 2023--24ல் ஒன்றரை லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

மாநில விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஈஷா அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளர் பூபதி, ஆண்டு வரவு செலவு கணக்குகள் குறித்து எடுத்துரைத்தார். இயக்குனர் சிவகுமார் நன்றி கூறினார்.

----

ஆன்லைன் பட்டா மாறுதல் தாமதம்

திருப்பூர்:

மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி, சப்கலெக்டர் சவுமியாவிடம் அளித்த மனு:விவசாயிகள் ஏராளமானோர் பட்டா மாறுதல்களுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

முன்னுரிமை அடிப்படையில்தான் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள், அந்தந்த வி.ஏ.ஓ.,க்களால் பரிசீலிக்கப்பட்டு துணைதாசில்தார்களுக்கு அனுப்பப்படுகிறது; அங்கேயும் இதே நடைமுறையே கடைபிடிக்கப்படுகிறது. ஆனாலும், நிர்ணயிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் பட்டாமாறுதல் செய்யமுடிவதில்லை.

வி.ஏ.ஓ., பரிசீலனையின்போது, ஒருவரின் பட்டா மாறுதல் மனுவில் குறைபாடுகள் இருந்தாலும், அடுத்தடுத்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. விவசாயிகள் பட்டா, வீட்டுமனை பட்டா மனுக்களுக்கு தனித்தனியாக முன்னுரிமை அளித்து, காலதாமதமின்றி பட்டா மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கிராமப்புற விவசாயிகள், கால்டை வளர்ப்பை பிரதானமாக கொண்டுள்ளனர். வேளாண், தோட் டக்கலைத்துறை, பொறியியல் துறை மூலம், அதிக எண்ணிக்கையில் தட்டுவெட்டும் இயந்திரங்களை தருவித்து, விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

---

3 மயில்கள் பலி

அவிநாசி ஜூலை 22--

அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராயன் கோவில் காலனி பகுதியில் உள்ள ஐஸ்வர்யா கார்டனில் ஒரே சமயத்தில் மூன்று மயில்கள் இறந்து கிடந்தன. வனவர் சங்கீதா, வனக் காவலர் பொம்மன், மான் காவலர் வெங்கடேசன், கிராம உதவியாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் அங்கு வந்தனர். மயில்கள் பலியானது எப்படி என்பது குறித்து உடற்கூறு ஆய்வுக்குப் பின் தெரியவரும். மயில்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

---

தயாராகின்றன இலவச சைக்கிள்கள்

திருப்பூர், ஜூலை 22-

பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.

தொலைதுாரத்தில் இருந்து பள்ளிக்கு வருவோருக்கு பயணம் எளிதாக, பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு அரசு இலவசமாக சைக்கிள் வழங்குகிறது.

நடப்பு கல்வியாண்டு வழங்க வேண்டிய சைக்கிள்களின் உதிரிபாகங்கள், சென்னையில் இருந்து ஜூன் துவக்கத்தில் திருப்பூர் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை பிரித்து, டயர், டியூப், ரிம், ேஹண்டில்பார், சீட், பெடல் உள்ளிட்டவற்றை சைக்கிளில் பொருத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது. ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் சைக்கிள் உதிரிபாகம் பொருத்தும் பணியில், பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இப்பணிகள் முடிவு பெற்றதும் தாலுகா வாரியாக, பள்ளிகளுக்கு சைக்கிள்கள் அனுப்பி வைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

---

ஆசிரியர் போட்டித்தேர்வு

திருப்பூர், ஜூலை 22-

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான, ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.

திருப்பூர் மாவட்டத்தில், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று மையங்களில் நேற்று போட்டித்தேர்வு நடைபெற்றது.

காலை, 10:00 மணிக்கு துவங்கிய தேர்வு, மதியம் 1:30 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 784 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இவர்களில், 25 பேர் ஆப்சென்ட் ஆகினர்; மொத்தம் 759 பேர் தேர்வு எழுதினர்.

----

ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

பல்லடம்:

தமிழக அரசை கண்டித்து, பல்லடத்தில் ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொசவம்பாளையம் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன், சர்வேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர்கள் ராஜ்குமார், சுப்பிரமணியம், செல்வம், சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹிந்து கோவில்களை சீரழிக்கும் அறநிலையத் துறையே கோவிலை விட்டு வெளியேறு என, கோஷங்கள் எழுப்பிய படி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட பொறுப்பாளர்கள் மதன், சிவசக்தி, கனகராஜ், சுரேஷ்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

---

சிக்கண்ணா கல்லுாரிக்கு 'பி டபுள் பிளஸ்'

திருப்பூர், ஜூலை 22-

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி தேசிய தர மதிப்பீட்டு குழுவின்(நாக்) 'ஏ' கிரேடு சான்றிதழ் பெற விண்ணப்பித்திருந்தது. 'நாக்' குழுவினர் இரண்டு நாட்கள் கல்லுாரியில் ஆய்வு நடத்தினர்.

ஒரு வாரத்துக்கு பின், நேற்றுமுன்தினம் ஆய்வின் முடிவுகள் குழுவினரால் வெளியிடப்பட்டது. 'பி' அந்தஸ்தில் இருந்த கல்லுாரி, 'பி டபுள் பிளஸ்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கூறுகையில், 'அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து, 2029 இறுதியில் 'ஏ' கிரேடுக்காக மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்புஉள்ளது,' என்றார்.

காரணம் என்ன?


'நாக்' குழுவில், நான்கு பேராசிரியர்கள் இடம் பெற்றிருந்தனர். நால்வர் நான்கு குழுக்களாக பிரிந்து, ஒவ்வொரு பாடப்பிரிவாக அலசி ஆராய்ந்து நாள் முழுதும் ஆய்வு நடத்தினர். ஓரிரு வகுப்புகளில் மட்டுமே 'டிஜிட்டல், 'பவர்பாயின்ட்' பிரசன்டேசன் வகுப்பறை இருந்துள்ளது.

பெரும்பாலானவற்றில் அத்தகைய வசதி இல்லை. இதனால்தான், 'ஏ' கிரேடு கிடைக்காமல், 'பி டபுள் பிளஸ்' தரச்சான்று கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

----

கட்டுமான தொழிலாளர் மாநாடு

திருப்பூர்:

கட்டட கட்டுமான தொழிலாளர் சங்க தெற்கு தாலுகா மாநாடு, பி.ஆர்., நிலையத்தில் நேற்று நடந்தது. துணை தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ஜோதி, அஞ்சலி தீர்மானம் வாசித்தார். பொருளாளர் செல்வகுமார் வரவேற்றார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் மூர்த்தி, கோரிக்கைகளை விளக்கி பேசினார். தலைவராக பொம்முதுரை, செயலாளராக ரமேஷ்குமார், பொருளாளராக செல்வகுமார் உள்ளிட்டோர் தேர்வாயினர்.

கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு, 55 வயது முதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும். கட்டுமான தொழிலாளர் ஓய்வூதிய தொகையை, மூவாயிரம் ரூபாயாக உயர்த்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயபால் வாழ்த்தி பேசினார். கட்டுமான சங்க மாநில பொதுச்செயலாளர் குமார் நன்றி கூறினார்.

----

கட்டுமானப்பொருள் கண்காட்சி இன்று நிறைவு

திருப்பூர், ஜூலை 22-

திருப்பூரில் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில், சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் நடைபெறும் நான்கு நாள், கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி கடந்த 19ம் தேதி துவங்கியது.

கட்டுமானத் துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களின் சார்பில் 200 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சி இன்றுடன்(22ம் தேதி) நிறைவடைகிறது. கடந்த மூன்று நாளாக கண்காட்சியில் கட்டுமான துறை சார்ந்தோர் மற்றும் பார்வையாளர்கள் திரளாக கலந்து கொண்டு, அரங்குகளைப் பார்வையிட்டனர். விறுவிறுப்பான வர்த்தக விசாரணை நடந்தது.

கண்காட்சியில், பசுமை கட்டுமானம் சார்ந்த செங்கல், கம்பி, சிமென்ட், ரெடிமேட் கான்கிரீட் நிறுவனங்கள், மரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்கள், டைல்ஸ், கிரானைட், மார்பிள்ஸ், மரத் தளம், நவீன மின்சாரம் மற்றும் பிளம்பிங் பொருட்கள்; புதிய வடிவிலானா அலங்கார மின் விளக்குகள், 'சிசிடிவி' கேமரா, மாடர்ன் ஹோம் ஆட்டோமேஷன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வகைகள், பேவர் பிளாக், சோலார் லாக்கர், கண்ணாடி வகைகள் மற்றும் புதிய பெயிண்ட் வகைகள், குளியலறை பிட்டிங்ஸ் உள்ளிட்டவை உள்ளன.

கட்டுமானம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் வல்லுனர்கள் பார்வையாளர் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். தினமும் மாலை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. காலை 10:00 முதல் மாலை 8:00 மணி வரை கண்காட்சியைப் பார்வையிடலாம்; அனுமதி இலவசம்.

இன்று மண்டல மாநாடு

சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் மண்டலம் ஏழு அமைப்பின் மண்டல மாநாடு, இன்று காலை வித்யா கார்த்திக் மண்டபத்தில் உள்ள அரங்கில் நடக்கிறது. மண்டலம் ஏழு அமைப்புக்கு உட்பட்ட மாவட்டங்களின் சங்க நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.

----

முப்பெரும் விழா

திருப்பூர்:

திருப்பூரில், தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

பணி நிறைவு பெற்ற தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர், பழனிசாமி (தலைமையாசிரியர், நஞ்சப்பா பள்ளி), மதிவாணன் (முதுகலை பட்டதாரி ஆசிரியர், நஞ்சப்பா பள்ளி), பழனிசாமி (தலைமையாசிரியர், செல்லப்பம் பாளையம் நடுநிலைப் பள்ளி), கற்பகம் (தலைமையாசிரியர், கவிதா லட்சுமி நகர் பள்ளி), பத்மாவதி (போத்தம்பாளையம்), ரங்கநாதன் (பதிவு எழுத்தர், அவிநாசி) ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. குரு பூர்ணிமாவை முன்னிட்டு குரு வணக்கம் வழிபாடு மற்றும் மரக்கன்று நடும் விழா நடந்தது.

மாநில நிர்வாகிகள் கந்தசாமி, முருகன், சாருமதி தேவி, ஆறுமுகம், தண்டபாணி; மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் கோபால கிருஷ்ணன், பொருளாளர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

---

'நாம் தமிழர்' ஆர்ப்பாட்டம்

அனுப்பர்பாளையம், ஜூலை 22-

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து, திருப்பூர், புது பஸ் ஸ்டாண்ட் முன், நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகசுந்தரம், ஈஸ்வரன், சுப்பிரமணியம், ரமேஷ், இளைஞர் பாசறை செயலாளர் சேக், மண்டல செயலாளர் வேலுசாமி, மாவட்ட தலைவர் ரத்னா மனோகர், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

திருப்பூர் அனைத்து தொழில்முனைவோர் கூட் டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துரத்தினம், கோவை ஒருங்கிணைப்பாளர் ஜெயபால், உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், மெர்ச்சன்டைசர் கூட்டமைப்பு சங்க தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட தொழில் அமைப்பினரும் பங்கேற்றனர்.

கட்சியினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

---

குடியிருப்புக்கு வசதி

தீர்வு கிடைக்குமா?

திருப்பூர், ஜூலை 22-

வீரபாண்டி, வஞ்சி நகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள், மாநகராட்சி நிர்வாகம் வசம் ஒப்படைத்தால்தான் அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

ஐகோர்ட் உத்தரவு; நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக, திருப்பூரில் நீர் நிலை மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் இருந்த நுாற்றுக்கணக்கான வீடுகள் காலி செய்யப்பட்டன.

காலி செய்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீரபாண்டி வஞ்சிநகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன.நேற்று அப்பகுதியில் குறை கேட்பு முகாம் நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

வார்டு கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், மாநகராட்சி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினர் கலந்து ெகாண்டனர்.வஞ்சி நகருக்கு பஸ் ஸ்டாப் வசதி; கூடுதல் பஸ்கள் இயக்கம்; குடிநீர் சப்ளை, மழை நீர் வடிகால், சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுகோள்கள் முன் வைக்கப்பட்டன.

அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.இக்குடியிருப்பு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது. வாரியம் மூலம் இதை வகை மாற்றம் செய்து, மாநகராட்சி நிர்வாகத்திடம் அதன் பராமரிப்பை ஒப்படைத்தால் மட்டுமே மாநகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது.

இது குறித்து வாரிய அதிகாரிகளுடன் கலந்து பேசி அதற்கான தீர்வு ஏற் படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

---

தி.மு.க., உதவி

திருப்பூர்:

திருப்பூர், ஸ்ரீநகரைச் சேர்ந்த முருகன் மகள் அனிதா, 23. கல்லுாரி மாணவி; கிக் பாக்ஸிங் வீராங்கனை; தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

வரும் 24 முதல் 28 ம் தேதி வரை கோவாவில் தேசிய சீனியர் கிக் பாக்ஸிங் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அனிதா தேர்வாகியுள்ளார். போட்டிகளில் பங்கேற்க அவருக்கு உபகரணங்கள் தேவைப்பட்டது.

இதற்காக திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ் 30 ஆயிரம் ரூபாய் வழங்க முன் வந்தார். இதற்கான காசோலையை அமைச்சர் சாமிநாதன், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் அனிதாவிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

---

மின் கட்டண உயர்வு

தடுமாறும் பாலிபேக், அட்டைப்பெட்டி உற்பத்தி

திருப்பூர், ஜூலை 22-

மின் கட்டண உயர்வு, திருப்பூரில் பாலிபேக், அட்டைப்பெட்டி உற்பத்தி துறையினரை திக்குமுக்காடச்செய்துள்ளது.

ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுக்காக திருப்பூரில் தயாரிக்கப்படும் பின்னலாடை ரகங்கள், பாலிபேக்களில் பேக்கிங் செய்யப்பட்டு, அட்டைப்பெட்டிகளில் வைத்து அனுப்பிவைக்கப்படுகிறது. பாலிபேக் மற்றும் அட்டை பெட்டி உற்பத்தி துறையினருக்கு, புதிய மின் கட்டண உயர்வு சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

தடுமாறும் உற்பத்தியாளர்கள்

திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க தலைவர் சண்முகம்:

திருப்பூரில் 250 பாலிபேக் உற்பத்தி நிறுவனங்கள் இயங்குகின்றன. உள்நாட்டு, ஏற்றுமதி ஆயத்த ஆடைகளை பேக்கிங் செய்வது, காம்பாக்டிங் துணி ரோல்களை பேக்கிங் செய்வதற்கான அனைத்துவகை பாலிபேக் ரகங்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னலாடை துறை தேவைக்கு நாளொன்றுக்கு 150 டன்னுக்கு மேல் பாலிபேக் உற்பத்தி செய்வது அவசியமாகிறது. இரண்டு மணி நேரத்துக்கு தொடர்ந்து தடையில்லா மின்சாரம் கொடுத்தால் மட்டுமே மெல்ட்டிங் மெஷின் தயாராகும்; பாலி புரொப்லின் மூலப்பொருளை உருக்கி, பிளாஸ்டிக் உற்பத்திக்கு தயார்படுத்தமுடியும்.

மின் நிலை கட்டணம், உச்சபட்ச நேரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை நிலைதடுமாறிக்கொண்டிருக்கிறது. இச்சூழலில், மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, அதிக மின் பயன்பாடுள்ள பாலிபேக் உற்பத்தி துறையினரை மிக கடுமையாக பாதிக்கச் செய்துவருகிறது. உற்பத்தி செலவினம் உயர்ந்துள்ளதை எவ்வாறு ஈடு செய்வது என தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறோம். தமிழக அரசு, தொழில் அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று, மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்.

இதே நிலை நீடித்தால் சிக்கல்

தென்னிந்திய அட்டை பெட்டி உற்பத்தியாளர் சங்க (கோவை மண்டலம்) தலைவர் சிவக்குமார்:

பின்னலாடைகள், உணவுப்பொருட்கள், ஆட்டோமொபைல் என அனைத்து துறையின் பேக்கிங்கிற்கும் அட்டைப்பெட்டி அவசியமாகிறது. பாலிபேக்கை போன்று, அட்டை பெட்டி உற்பத்தி நிறுவனங்களும் அதிக மின் பயன்பாடு கொண்டவை. ஒன்றரை மணி நேரம் மின்சாரம் வழங்கினால்தான் அட்டை பெட்டி தயாரிக்கும் ஹீட்டர் மெஷினை தயார்ப்படுத்தமுடியும்.

70 எச்.பி., முதல் 120 எச்.பி., திறன் கொண்ட மின் இணைப்பு பெற்று, அட்டைப்பெட்டி நிறுவனங்கள் இயங்குகின்றன. கிராப்ட் காகிதம், பேஸ்ட் உள்பட அனைத்து மூலப்பொருட்கள் விலை, தொழிலாளர் சம்பளம் உயர்வால் அட்டைப்பெட்டி நிறுவனங்கள் தடுமாறிவருகின்றன; தற்போது மின் கட்டணமும் உயர்ந்துவிட்டது. அட்டைப்பெட்டி உற்பத்தி செலவினம் 4.83 சதவீதம் அதிகரித்துள்ளது. அட்டைப்பெட்டி விலையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

உச்சபட்ச நேர கட்டணம், மின்நிலை கட்டண உயர்வு, புதிய மின் கட்டண உயர்வால், தமிழகத்தில் அட்டை பெட்டி உற்பத்தி துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதே நிலை நீடித்தால், அட்டைப்பெட்டி உற்பத்தி நிறுவனங்களும், சலுகைகள் வழங்கும் வெளிமாநிலங்களை நோக்கி நகர்ந்து சென்றுவிடும்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிலையை கருத்தில் கொண்டு, உச்சபட்ச நேரக் கட்டணம், மின் நிலை கட்டணங்களை குறைப்பது, புதிய மின் கட்டண உயர்வை வாபஸ் பெற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us