Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்!

விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்!

விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்!

விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்!

ADDED : ஜன 01, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
பல்லடம்;ஆங்கிலப் புத்தாண்டில், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறுமா என, விவசாய சங்க நிர்வாகிகள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாமாயில் இறக்குமதிக்கு தடை தேவை


செல்லமுத்து (மாநில தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி): கடந்த 2023ம் ஆண்டு, வேதனைகளும், சோதனைகளுமாக முடிந்து விட்டது. ஆங்கிலப் புத்தாண்டில், எல்லா நலமும் வளமும் கிடைக்க வேண்டும். மக்களுக்காக உழைக்கும் உழவர்களின் வாழக்கை நலிவடைந்து உள்ளது. விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிகளுக்கு மத்திய அரசு சலுகைகள் அளிக்க வேண்டும். பாமாயில் இறக்குமதியை தடை செய்து, தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும். பயிர் மற்றும் விவசாய மராமத்து கடன் உள்ளிட்ட பல்வேறு விவசாய கடன்களை முறைப்படுத்த வேண்டும். இலக்குகளை எட்ட வேண்டும் என்பதற்காக, பெயரளவுக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன. போர்க்கால அடிப்படையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

பால் உட்பட அனைத்து விவசாய விளை பொருட்கள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள முன்கூட்டியே விவசாயிகளுடன் ஆலோசிக்க வேண்டும். ஓட்டுகளை கவர்வதற்காக பெயரளவுக்கு செயல்படுத்தப்படும் இலவச ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டங்களை முறைப்படுத்த வேண்டும். விளைபொருட்கள் விற்பனையில் கமிஷன் ஏஜென்டுகளே அதிக லாபம் பெறுவதால், விவசாயிகள் நேரடியாக பயன்பெறும் வகையில் விற்பனை சந்தைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.

நதிகள் தேசிய மயமாகுமா?


ஈஸ்வரன் (திருப்பூர் மாவட்ட தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்): தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், பாமாயில் விற்பனையை நிறுத்தி, தேங்காய் எண்ணெய் விநியோகத்தை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு துறைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உபகரணங்கள், தொழில்நுட்ப கருவிகள் தரமானதாக இல்லை. விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை போன்றே, வேளாண் உபகரணங்கள் வாங்குவதற்கான மானிய தொகையையும், விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்த வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையே நீருக்காக ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, நதிகளை தேசிய மயமாக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவும், மது போதையில் இருந்து பொதுமக்களை மீட்கவும், கள்ளுக்கான தடையை நீக்கவும் வேண்டும். பணிகள் முடிந்தும் கிடப்பில் உள்ள அவிநாசி- - அத்திக்கடவு திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

காய்கறி விலை வீழ்ச்சி மற்றும் உயர்வின்போது, விவசாயிகள், நுகர்வோர் பாதிக்காத வகையில் நடவடிக்கை வேண்டும். ஆனைமலை நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கையால், விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட வேண்டும்.

விவசாயிகளிடம் நேரடி கொள்முதல்


ஈசன் முருகசாமி (நிறுவன தலைவர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்): விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து விளை பொருட்களுக்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணை பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்கி, விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மத்திய, மாநில அளவில் அரசியல் அமைப்பு சட்ட ரீதியான, விவசாயிகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கட்டணமில்லா வேளாண் மின்சாரம் வழங்க வேண்டும். 2013ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய நிலமெடுப்பு சட்டத்தை பயன்படுத்தி நிலம் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். நுாறு நாள் திட்டத்தை வேளாண் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்துமாறு மாற்றி அமைக்க வேண்டும்.

பாமாயிலுக்கு மானியம் கொடுப்பதை நிறுத்தி, தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும். காட்டுப்பன்றிகள், மான், மயில், யானை, குரங்கு ஆகியவற்றால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதற்கு இழப்பீடு வழங்க வேண்டும். கள் இறக்க அனுமதிக்க வேண்டும். சிப்காட் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு நிலம் எடுத்துக் கொடுக்கும் திட்டத்தை தடை செய்ய வேண்டும். கரும்புக்கு டன் ஒன்றுக்கு, 4 ஆயிரம் ரூபாய், நெல், குவின்டாலுக்கு, 2,500 ரூபாய் வழங்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us