/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மக்காச்சோளம் அறுவடை தீவிரம் ;விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சிமக்காச்சோளம் அறுவடை தீவிரம் ;விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
மக்காச்சோளம் அறுவடை தீவிரம் ;விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
மக்காச்சோளம் அறுவடை தீவிரம் ;விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
மக்காச்சோளம் அறுவடை தீவிரம் ;விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : பிப் 12, 2024 12:12 AM
உடுமலை:உடுமலை பகுதிகளில், மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், தேவை அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்து வருகிறது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., பாசன நிலங்கள், அமராவதி பாசன நிலங்கள் மற்றும் இறவை, மானாவாரி பாசன நிலங்களில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
கடந்தாண்டு பருவமழைகள் குறைந்த நிலையில், சாகுபடி பரப்பளவும் குறைந்தது. வழக்கமாக, டிச., மாதம் துவங்கி, மார்ச் வரை மக்காச்சோளம் அறுவடை செய்யப்படும்.
இப்பகுதிகளில் விளையும் மக்காச்சோளம், கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள, இந்நிறுவனங்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 5 ஆயிரம் முதல், 10 ஆயிரம் டன் மக்காச்சோளம் தேவை உள்ளது.
உள்ளூர் உற்பத்தி மட்டுமன்றி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், தீவன உற்பத்திக்கு மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்படுகிறது.
கடந்த, சில ஆண்டுகளாக, வெளிமாநில வரத்து குறைந்துள்ள நிலையில், எத்தனால் உற்பத்திக்கும் மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது.
சாகுபடி குறைந்து, வரத்து குறைந்துள்ள நிலையில், தேவை அதிகரித்துள்ளதால் மக்காச்சோளம் விலை நிலையாக உள்ளது.
இந்நிலையில், அறுவடையாகும் மக்காச்சோளத்திற்கு கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து வருகிறது. கடந்த, 1ம் தேதி, ஒரு குவிண்டால் மக்காச்சோளம், 2,190 ரூபாய் வரை விற்றது. படிப்படியாக விலை உயர்ந்து, நேற்று குவிண்டால், 2,400 முதல், 2,500 ரூபாய் வரை விற்றது.
ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:
உடுமலை பகுதிகளில், தற்போது, மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. வழக்கமாக வரத்து அதிகரிக்கும் போது, விலை குறையும். நடப்பாண்டு, சாகுபடி பரப்பு குறைந்ததோடு, வெளிமாநில வரத்தும் குறைந்துள்ளது.
தீவன உற்பத்தி நிறுவனங்கள், எத்தனால் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால், விலை ஓரளவு சீராக உள்ளது. வரும் மாதங்களில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு, கூறினர்.