Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விவசாயத்திற்கு தனி மின் வழித்தடம் திட்ட வடிவமைப்பு பணியில் மின் வாரியம்

விவசாயத்திற்கு தனி மின் வழித்தடம் திட்ட வடிவமைப்பு பணியில் மின் வாரியம்

விவசாயத்திற்கு தனி மின் வழித்தடம் திட்ட வடிவமைப்பு பணியில் மின் வாரியம்

விவசாயத்திற்கு தனி மின் வழித்தடம் திட்ட வடிவமைப்பு பணியில் மின் வாரியம்

ADDED : மே 19, 2025 11:19 PM


Google News
உடுமலை; விவசாய மின் இணைப்புகளுக்கு, தனி வழித்தடம் அமைக்கும் வகையில், மின் வாரியம் திட்ட வடிவமைப்பு மேற்கொண்டு வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது.

மாநிலம் முழுவதும் தொழில், விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அவ்வகையில், தமிழகத்தில், 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளது. மாநில அரசு விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதால், ஆண்டுக்கு, ரூ.7,280 கோடி வரை செலவாகிறது.

இந்நிலையில், தற்போது விவசாய மின் இணைப்புகளுக்கு மட்டும், தனி மின் வழித்தடம் அமைக்கும் வகையில், மத்திய அரசின், ஆர்.டி.எஸ்.எஸ்., திட்ட நிதியின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக, மாவட்டம் வாரியாக, தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மின் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து, தற்போதுள்ள விவசாய மின் இணைப்புகள், அவற்றுக்கான மின் வழித்தடம் அமைப்பதற்கான திட்ட வடிவமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக அரசு சார்பில், 24 மணி நேரமும் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட நேரம் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில பகுதிகளில், இரு முனை மின்சாரத்தை, மும்முனை மின்சாரமாக மாற்றி, விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, தனி மின் வழித்தடம் அமைக்கும் போது, குறிப்பிட்ட நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கும் நிலை ஏற்படும். இதனால், இலவச மின்சாரம் முழுமையாக அனுபவித்து வரும் விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது.

மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது : தமிழக அரசு உத்தரவு அடிப்படையில், விவசாயத்திற்கு என தனி மின் வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்த அடிப்படையில், திட்டவடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெரும்பாலும் பழைய மின் வழித்தடத்தில் புதிதாக ஒரு மின் கம்பிகள் அமைக்கப்படும்.

தேவைப்படும் இடங்களில், மின் கம்பிகள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் வழங்கப்பட்டு, தனியார் நிறுவனம் நிறுவும். தற்போது, திட்ட வடிவமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இரு ஆண்டுக்குள் பணி முழுமையடையும். இதனால், விவசாயத்திற்கு தனியாக மின்சாரம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுவதோடு, மின் அழுத்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசுக்கு வருவாய் இழப்பு குறையும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

இந்த முறையை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us