/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால்...பொங்கி வரும் வெள்ளம்!அமராவதி அணை நீர்மட்டம் வேகமாக உயர்வுமேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால்...பொங்கி வரும் வெள்ளம்!அமராவதி அணை நீர்மட்டம் வேகமாக உயர்வு
மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால்...பொங்கி வரும் வெள்ளம்!அமராவதி அணை நீர்மட்டம் வேகமாக உயர்வு
மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால்...பொங்கி வரும் வெள்ளம்!அமராவதி அணை நீர்மட்டம் வேகமாக உயர்வு
மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால்...பொங்கி வரும் வெள்ளம்!அமராவதி அணை நீர்மட்டம் வேகமாக உயர்வு
ADDED : ஜூலை 17, 2024 12:33 AM

உடுமலை;மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை காரணமாக அமராவதி அணை நீர் மட்டம், ஒரே நாளில், 8.3 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசனத்திற்கு, குறுவை நெல் சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு, அமராவதி அணை ஜூலை, 15ல் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நடப்பாண்டு பருவ மழை தாமதம் காரணமாக, அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான, மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள, கேரளா மாநிலம், தலையாறு, மூணாறு, சின்னாறு, தேனாறு பகுதிகளில், இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
முக்கிய நீர் வரத்து ஆறான பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மறையூர் கோவில் கடவு, உயர்மட்ட பாலத்தை தொட்டு நீர் சென்றதோடு, பாம்பாற்றின் கரையில் அமைந்துள்ள தென்காசி நாதர் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்தது.
ஒரு ஆண்டுக்குப்பின், தற்போது அமராவதி அணையின் பிரதான நீர் வரத்து ஆறுகளான, பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், அணை நீர்மட்டம், 64.37 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில், 8.3 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, அணையின் மொத்தமுள்ள, 90 அடியில், 72.67 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 2,594.93 மில்லியன் கனஅடி நீர்மட்டம் இருந்தது.
அணைக்கு வினாடிக்கு, 7,003 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து, பாசனத்திற்கு, 150 கனஅடி நீர் திறக்கப்பட்டிருந்தது.
அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், இரு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அருவிக்கு 2ம் நாளாக தடை
திருமூர்த்திமலைப்பகுதிகளிலும், இரு நாட்களாக கன மழை பெய்து வருவதால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், இரண்டாவது நாளாக நேற்றும், சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மலையடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
திருமூர்த்தி அணைக்கும் பாலாறு வழியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், அணை நீர்மட்டம், 28.41 அடியாகவும், மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கன அடியில், 794.83 மில்லியன் கன அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு, பாலாற்றின் வழியாக, 21 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து. குடிநீருக்கு, 27 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.