/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்; தோட்டக்கலைத்துறை அழைப்பு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்; தோட்டக்கலைத்துறை அழைப்பு
விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்; தோட்டக்கலைத்துறை அழைப்பு
விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்; தோட்டக்கலைத்துறை அழைப்பு
விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்; தோட்டக்கலைத்துறை அழைப்பு
ADDED : செப் 15, 2025 09:15 PM

உடுமலை; மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை வாயிலாக, வேளாண் காடுகள் வளர்ப்புத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் உமாசங்கரி கூறியதாவது: மடத்துக்குளம் வட்டாரத்திலுள்ள விவசாயிகளுக்கு, வேளாண் காடுகள் வளர்ப்புத்திட்டத்தின் கீழ், நுாறு சதவீதம் மானியத்தில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
விவசாயிகளின் வருவாயை பெருக்கவும், பசுமையை ஏற்படுத்தவும், வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேக்கு, மகோகனி மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
தேக்கு மரம் நல்ல உயரமாக வளர்வதுடன் மிகவும் உறுதியானதாகும். சூரிய ஒளி நன்றாக கிடைத்தால், மரம் மிகவும் நன்றாக வளரக்கூடியதாகும்.
தேக்கு நடவு செய்யும் இடம் நன்றாக சுத்தம் செய்து, களைகள் அகற்றப்பட வேண்டும். மழைக்காலத்திற்கு முன்னர், 2 மீட்டருக்கு 2 மீட்டர் இடைவெளியில், 60 கன சென்டிமீட்டர் அளவுள்ள குழி எடுத்து, குழியை முக்கால் பாகத்திற்கு, மக்கிய தொழு உரம் இட்டு நிரப்பி, பின்னர் தேக்குமர கன்றுகளை நடவு செய்ய வேண்டும். தேக்கு மரங்கள் நல்ல தரமானதாகவும், பக்கக்கிளைகள் இல்லாமல் வளர்த்தால் தான், அதிக வருவாய் கிடைக்கும்.
ஆகவே பக்கக்கிளைகளை, தரை மட்டத்திலிருந்து மரத்தின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் மட்டுமே கழிக்க வேண்டும். மேற்படி மரங்களை நன்றாக பராமரித்து வருவதன் வாயிலாக, நல்ல மகசூல் கிடைக்கும்.
மகோகனி மரங்கள் எளிதாக வளர்க்கக்கூடியவை, விவசாயிகளுக்கு அதிக வருவாய் ஈட்ட உதவும். இம் மரம், தடிமரம் ஒட்டு பலகை போன்ற பல்வேறு பயன்பாடுகளை கொண்டவை. இந்த மரங்கள் வளிமண்டலத்தில் இருந்து, கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, காலநிலை மாற்றத்தை தணிக்க உதவுகின்றன.
மகோகனி மரத்திற்கான தேவை அதிகம் இருப்பதால், சாகுபடி செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எனவே விவசாயிகள், மேற்கண்ட தேக்கு, மகோகனி மரக்கன்றுகளை நடவு செய்து பயன்பெறலாம்.
விவசாயிகள் புற மற்றும் எல்லை பகுதிகளில் நடவு செய்வதற்கு, ஒரு ஹெக்டேருக்கு, 160 மரக்கன்றுகள் வீதம், அதிகபட்சமாக, 2 ஹெக்டேருக்கு நாற்றுக்கள் வழங்கப்படும்.
நாற்றுக்கள் தேவைப்படும் விவசாயிகள், மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சிட்டா, ஆதார் நகல்களை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், பூவிகா தேவி, 80720 09226 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்தார்.