/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பள்ளி வளாக சுற்றுச்சுவர் இடிப்பு; அதிகரிக்கும் சமூக விரோத செயல்கள் பள்ளி வளாக சுற்றுச்சுவர் இடிப்பு; அதிகரிக்கும் சமூக விரோத செயல்கள்
பள்ளி வளாக சுற்றுச்சுவர் இடிப்பு; அதிகரிக்கும் சமூக விரோத செயல்கள்
பள்ளி வளாக சுற்றுச்சுவர் இடிப்பு; அதிகரிக்கும் சமூக விரோத செயல்கள்
பள்ளி வளாக சுற்றுச்சுவர் இடிப்பு; அதிகரிக்கும் சமூக விரோத செயல்கள்
ADDED : ஜூன் 11, 2025 07:42 PM

உடுமலை; உடுமலையில், நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில், இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்படாத நிலையில், சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது.
உடுமலை நகராட்சி, 13வது வார்டு, யு.கே.சி.,நகர் பகுதியில், நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளியில், யு.கே.சி., நகர், கே.ஜி., நகர், கண்ணப்பன் நகர், வேல்முருகன் லே-அவுட், கொல்லன் பட்டறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இதே வளாகத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில், 40 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
பள்ளிக்கு அருகில், தமிழக அரசு சார்பில் அறிவுசார் மையம் செயல்படுகிறது. இந்த மையம் கட்டும் பணியின் போது, கட்டுமான பொருட்களை கொண்டு செல்லும் வகையில், பள்ளியின் சுற்றுச்சுவர் இரு இடங்களில் இடித்து, வழித்தடம் உருவாக்கப்பட்டது.
கட்டுமான பணிகள் நிறைவடைந்து ஆறு மாதங்களான நிலையில், இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர், இது வரை கட்டப்படவில்லை. இதனால், பகல் மற்றும் இரவு நேரத்தில், போதை, கஞ்சா ஆசாமிகள் உள்ளே புகுந்து, மது அருந்துவது, கஞ்சா புகைப்பது, சீட்டாட்டம் என சமூக விரோதச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும், பள்ளி வளாகத்தை திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றி வருவதோடு, மது பாட்டில்களையும் உள்ளேயே உடைத்து வீசுகின்றனர். இதனால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச்சுவரை உடனடியாக கட்டவும், பள்ளி கழிப்பறையை புதுப்பித்து, மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பகுதிகளில் சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், போலீசார் ரோந்து பணியை அதிகரிக்கவும்வேண்டும், என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.