/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கிராம குளங்களுக்கு நீர் திறக்க வலியுறுத்தி மறியல்; மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்புகிராம குளங்களுக்கு நீர் திறக்க வலியுறுத்தி மறியல்; மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
கிராம குளங்களுக்கு நீர் திறக்க வலியுறுத்தி மறியல்; மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
கிராம குளங்களுக்கு நீர் திறக்க வலியுறுத்தி மறியல்; மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
கிராம குளங்களுக்கு நீர் திறக்க வலியுறுத்தி மறியல்; மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜன 02, 2024 11:43 PM

உடுமலை;உடுமலை அருகே, புதுப்பாளையத்தில், குளங்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, இரு கிராம மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால், தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.
குடிமங்கலம் ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டத்தில், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. திட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ளதால், ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம், அடிவள்ளி கிராமத்தில், நிரந்தர குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
எனவே, பி.ஏ.பி., புதுப்பாளையம் கிளை கால்வாய் வாயிலாக, புதுப்பாளையம் மற்றும் அடிவள்ளி குளங்களுக்கு நீர் நிரப்ப வேண்டும் என, பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
குளங்களில், நீர்நிரப்பினால் உள்ளூர் நீராதாரமான போர்வெல்களுக்கு நீர் வரத்து கிடைக்கும்; கோடை காலத்திலும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இது குறித்து, ஊராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றி நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பபட்டது.
ஆனால், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதி விவசாயிகள், தங்கள் விளைநிலங்களுக்குரிய பாசன நீரை, குளங்களுக்கு திருப்ப முன்வந்த போதும், அதற்கும் நீர்வளத்துறையினர் தடைவிதித்தனர்.
பாதிப்படைந்த, புதுப்பாளையம், அடிவள்ளி கிராம மக்கள், பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், நேற்று மாலை, 4:30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்து, கோழிக்குட்டை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
சம்பவ இடத்துக்கு, உடுமலை டி.எஸ்.பி., சுகுமாறன், குடிமங்கலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சென்று பேச்சு நடத்தினர். அப்போது, 'வழக்கமாக, பி.ஏ.பி., மண்டல பாசன காலத்தில், குளங்களுக்கு நீர் நிரப்புவது வழக்கம். கடந்தாண்டு, பருவமழைகள் போதியளவு பெய்யாததால், வறட்சி ஏற்பட்டுள்ளது.
குடிநீர் தேவைக்காக குளங்களுக்கு தண்ணீர் திறக்க பல மாதங்களாக வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது குளங்களை நிரப்பாவிட்டால், கிராமங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தொடரும்,' என மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து, மறியல் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். போராட்டத்தால், அப்பகுதியில் பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.