Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பத்திரப்பதிவு பணிகள் மந்தம்

பத்திரப்பதிவு பணிகள் மந்தம்

பத்திரப்பதிவு பணிகள் மந்தம்

பத்திரப்பதிவு பணிகள் மந்தம்

ADDED : மார் 16, 2025 12:07 AM


Google News
பல்லடம்: பத்திரப்பதிவு சார்ந்த பணிகள் மந்த கதியில் நடப்பதாக, பல்லடம் வட்டார பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், அதிகளவு பத்திரப்பதிவு பணிகள் நடக்கும் அலுவலகங்களில் பல்லடமும் ஒன்று. தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட மற்றும் முகூர்த்தம், விசேஷ நாட்களில், 300க்கும் அதிகமான பத்திரங்களும் பதிவு செய்யப்படுகின்றன.

பல்லடம், பொங்கலுார் ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 39 கிராம பொதுமக்கள் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தினால், பயனடைகின்றனர். சமீப நாட்களாக, பத்திரப்பதிவு சார்ந்த பணிகள் மிகவும் மந்தகதியில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:

பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், வில்லங்கச் சான்று, நகல் உள்ளிட்டவை பெற, 20 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை காலதாமதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் தேங்கி கிடக்கின்றன. இதனால், அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை.

மேலும், 'இன்று போய் நாளை வா' என்ற கதையாக, அலைக்கழிக்கப்படுவதால், தேவையற்ற அலைச்சல், பொருள் செலவு ஏற்படுகிறது. இதேபோல், மூலப்பத்திரம் இல்லாவிட்டாலும், நகல் பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்யலாம் என்ற ஐகோர்ட் உத்தரவு உள்ளது. இருப்பினும், கோர்ட் உத்தரவை பின்பற்றாமல், பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.

தங்களுக்கு சாதகமானவர்களுக்கு மட்டும் உடனுக்குடன் பணிகள் நடக்கின்றன. இவ்வாறு, மந்த கதியில் இயங்கும் பத்திர அலுவலகத்தால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

மாவட்ட பதிவுத்துறை இது குறித்து கவனத்தில் கொண்டு, பணிகள் விரைந்து நடக்கவும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பத்திரப்பதிவு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us