ADDED : ஜன 06, 2024 12:25 AM

திருப்பூர்;வரும் 25 ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதியிலும், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, மாணவர்களுக்கு, போஸ்டர் தயாரித்தல், பாட்டு, ஓவியம் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. அவ்வகையில், நேற்று, எட்டு சட்டசபை தொகுதிகளிலும், மகளிர் சுய உதவி குழுவினருக்கான ரங்கோலி போட்டி நடத்தப்பட்டது.
திருப்பூர் தெற்கு தொகுதியில் மட்டும் ஆறு இடங்களில் கோலப்போட்டி நடத்தப்பட்டது; 25 மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்று கோலமிட்டனர். திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த கோலப்போட்டியில், மூன்று மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர்.
பல வண்ண பொடிகளில், ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில், அழகிய ரங்கோலி கோலமிட்டனர். ஒரு விரல் புரட்சியின் வலிமையை குறிப்பிட்டும், 'என் வாக்கு விற்பனைக்கு அல்ல' என்கிற வாசகத்தை கோலத்தில் எழுதியிருந்தனர்.
மாவட்ட அளவில் சிறந்த பத்து ரங்கோலி கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு, சுய உதவிக்குழுவினருக்கு பரிசளிக்கப்பட உள்ளது.