/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாசடைந்த கிணற்று நீர்; ஆய்வு செய்ய ஏற்பாடு மாசடைந்த கிணற்று நீர்; ஆய்வு செய்ய ஏற்பாடு
மாசடைந்த கிணற்று நீர்; ஆய்வு செய்ய ஏற்பாடு
மாசடைந்த கிணற்று நீர்; ஆய்வு செய்ய ஏற்பாடு
மாசடைந்த கிணற்று நீர்; ஆய்வு செய்ய ஏற்பாடு
ADDED : செப் 12, 2025 12:26 AM

திருப்பூர்; திருப்பூரில், பாறைக்குழியை ஒட்டிய கிணற்று நீர் மாசடைந்துள்ள நிலையில், விவசாய சங்கத்தினரின் முயற்சியால் நீரின் தன்மை ஆய்வுக்குபடுத்தப்பட உள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கென குப்பைக் கொட்டுவதற்கு, தரம் பிரித்து கையாள்வதற்கு பிரத்யேக இடமில்லாததால், காலாவதியான பாறைக் குழிகளை தேடிப்பிடித்து, அவற்றில் குப்பைக் கொட்டி நிரப்பப்பட்டு வருகின்றனர், மாநகராட்சி நிர்வாகத்தினர்.காலங்காலமாக இந்நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் நிலையில், இதனால் ஏற்படும் விபரீதத்தை உணர்ந்த மக்கள், 'பாறைக்குழியில் குப்பைக் கொட்டுவதால், சுகாதாரகேடு ஏற்படுகிறது' எனக்கூறி, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், முதலிபாளையம் பாறைக்குழி உட்பட, குப்பை நிரப்பப்பட்ட பாறைக்குழியை ஒட்டியுள்ள கிணறு மற்றும் 'போர்வெல்' நீர் மாசடைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழத்துவங்கியிருக்கிறது.
நீரின் தன்மை ஆய்வு
பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளைக்கால்வாய் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது;முதலிபாளையம் பாறைக்குழிகளில், தரம் பிரிக்கப்படாத திருப்பூர் மாநகரின் கழிவுகளை கொட்டக்கூடாது. கடந்த, 2015ல் இருந்து அங்கு குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டதால், அப்பகுதி முற்றிலுமாக மாசடைந்துள்ளது; மக்கள் சுவாசப்பிரச்னையால் அவதியுறுகின்றனர். 3 கி.மீ., சுற்றளவில் உள்ள கிணறு மற்றும் 'போர்வெல்' நீர் மாசடைந்திருக்கிறது. ஊராட்சி சார்பில் போடப்பட்ட ஆழ்துளை கிணற்றுநீர் கூட மாசடைந்திருக்கிறது. அப்பகுதி, மக்கள் வாழத்தகுதியற்ற இடமாகவே மாறிவிட்டது. இத்தகையை சூழலில் மீண்டும், மீண்டும் அங்கு குப்பை கொட்டப்படுவது, நியாயமற்றது.
எனவே, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினர் மற்றும் தனியார் பரிசோதனை கூட நிபுணர்கள் வாயிலாக கிணறு மற்றும் போர்வெல் நீரின் தன்மையை ஆய்வு செய்ய திட்டமிட்டோம். நேற்று, இப்பணியை மேற்கொள்ள உத்தேசித்த நிலையில், குடிநீர் வடிகால் வாரியத்தினர் வரவில்லை. எனவே, தனியார் ஆய்வுக்கூடத்தினர் வாயிலாக நீரின் தன்மையை ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் தன்மையை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.