/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சீரான பஞ்சு வரத்து; நூல் விலையில் சிக்கல் இல்லை: இனி, பின்னலாடை உற்பத்தியும் வேகமெடுக்கும்சீரான பஞ்சு வரத்து; நூல் விலையில் சிக்கல் இல்லை: இனி, பின்னலாடை உற்பத்தியும் வேகமெடுக்கும்
சீரான பஞ்சு வரத்து; நூல் விலையில் சிக்கல் இல்லை: இனி, பின்னலாடை உற்பத்தியும் வேகமெடுக்கும்
சீரான பஞ்சு வரத்து; நூல் விலையில் சிக்கல் இல்லை: இனி, பின்னலாடை உற்பத்தியும் வேகமெடுக்கும்
சீரான பஞ்சு வரத்து; நூல் விலையில் சிக்கல் இல்லை: இனி, பின்னலாடை உற்பத்தியும் வேகமெடுக்கும்
ADDED : ஜன 06, 2024 11:56 PM
திருப்பூர்:பஞ்சு வரத்து ஆரோக்கியமான நிலையில் இருப்பதால், நுால்விலையில் மாறுதல் ஏற்படவில்லை. பின்னலாடை உற்பத்தி விரைவில் பரபரப்பான நிலைக்கு மாறும் என்று தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், ஜவுளித்துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியம் வாய்ந்தது. சர்வதேச அளவில், இந்தியாவில் தரமான பருத்தி, அளவுக்கு அதிகமாக விளைந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து, பருத்தி நீக்கப்பட்டதால், அனைத்து தரப்பினரும் வர்த்தகம் செய்யும் வாய்ப்பு ஏற்படுகிறது.
சோதனையான2022ம் ஆண்டு
ஜவுளித்தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத நபர்களும், விலை குறைவாக இருக்கும் பஞ்சை வாங்கி இருப்பு வைக்கின்றனர். ஜவுளித்தொழில்துறைக்கு தேவை அதிகரிக்கும் போது, செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை உயர்த்துகின்றனர். இதன்காரணமாக, 2022ம் ஆண்டு சோதனையான ஆண்டாக அமைந்தது.
ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு ஜவுளி உற்பத்தியில் மந்தநிலை நிலவியதால், கடந்த 2023ம் ஆண்டிலும் பஞ்சு விலை உயரவில்லை. நடப்பு ஆண்டில், உள்நாட்டு ஜவுளி உற்பத்தி சீராக மாறியுள்ளது; கோடைகால ஆர்டர் விசாரணையும் சீராக இருப்பதால், சில மாதங்களில் நிலைமை சீராகும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அருமையான ஆரம்பம்
நடப்பு பருத்தி சீசனில், தரமான பஞ்சு வரத்து துவங்கியதும், வர்த்தகர்களும், தொழில்துறையினரும் கொள்முதல் செய்ய துவங்கிவிட்டனர். தற்போதைய நிலவரப்படி, ஒரு கேண்டி பஞ்சு (356 கிலோ), 55 ஆயிரம் முதல், 56 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.
பருத்தி சீசன் துவங்கியுள்ளதால், மேலும் சில மாதங்களுக்கு பஞ்சு வரத்து இருக்கும்; திடீரென தேவை அதிகரித்தாலும், சமாளிக்க முடியும் என்கின்றனர் பஞ்சு வியாபாரிகள். சீரான நிலை தொடர்வதால், இம்மாதமும், பருத்தி நுால் விலையில் மாற்றமில்லை என நுாற்பாலைகள் அறிவித்துள்ளன.
பருத்தி நுால்விலையை பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஏற்றத்தாழ்வாக இருந்தது. கடந்த, 2023 ஜன., மாதம், 20 ரூபாய்; ஜூலை மாதம் 25 ரூபாய்; டிச., மாதம் 10 ரூபாய் என, ஒரே ஆண்டில் கிலோவுக்கு 55 ரூபாய் வரை விலை குறைந்தது. இடைப்பட்ட காலத்தில், ஆக., - செப்., மாதங்களில் மட்டும், 22 முதல் 25 ரூபாய் வரை விலை உயர்ந்தது.
நடப்பு ஆண்டில், இம்மாதம் வரத்து சீராக இருப்பதால், விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என நுாற்பாலைகள் அறிவித்துள்ளன. நுாலுக்கான தேவை அதிகரித்து, ஆர்டர் அதிகரிக்கும் போது, விலையில் சிறிய மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக, நுாற்பாலைகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து திருப்பூர் பனியன் தொழில்துறையினர் கூறியதாவது:
திருப்பூரை பொறுத்தவரை, உள்நாட்டு சந்தை சீராகிவிட்டது. பாலியஸ்டர் ஆடை, துணி வரத்து இருந்தாலும், வழக்கம் போல் பருத்தி ஆடைகளுக்கான தேவையும் உள்ளது. சிலவகை பின்னலாடை தயாரிப்புக்கு, பருத்தி நுால் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படும். அந்தவகையில், நுாலுக்கான தேவை குறையவில்லை.
ஏற்றுமதி வர்த்தகம், கடந்த ஆறு மாதங்களாக சரிவில் இருந்தது; இறக்குமதி நாடுகளில், கையிருப்பு குறைந்துள்ளதால், கோடை கால ஆர்டர் விசாரணை பரபரப்பாக மாறியுள்ளது.
திருப்பூரை பொறுத்தவரை, அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் கோடைகால ஆர்டர்கள் மிக முக்கியமானவை. அதன்படி, புதிய ஆர்டர் கிடைக்காவிட்டாலும், வழக்கமான கோடைகால ஆர்டர் கிடைத்தாலே, திருப்பூர் மீண்டும் பரபரப்பான நிலைக்கு மாறிவிடும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தற்போதைய நுால்விலை
கோம்டு ரகம் (வரி நீங்கலாக), 16 ம் நம்பர் கிலோ - 250 ரூபாய், 20ம் நம்பர் - 253, 24ம் நம்பர் - 258; 30ம் நம்பர் - 268, 34ம் நம்பர் - 276, 40ம் நம்பர் 294 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'செமி கோம்டு' ரகம் :16 ம் நம்பர் - 240 ரூபாய், 20ம் நம்பர் - 243, 24 ம் நம்பர் - 248, 30ம் நம்பர் 258; 34 ம் நம்பர் - 266, 34 ம் நம்பர் - 284 ரூபாய் என்று விலையில் விற்கப்படுகிறது.