Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விபத்து வழக்குகளில், ரூ.1.94 கோடி  இழப்பீடு வழங்கல்

விபத்து வழக்குகளில், ரூ.1.94 கோடி  இழப்பீடு வழங்கல்

விபத்து வழக்குகளில், ரூ.1.94 கோடி  இழப்பீடு வழங்கல்

விபத்து வழக்குகளில், ரூ.1.94 கோடி  இழப்பீடு வழங்கல்

ADDED : செப் 14, 2025 02:20 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்;திருப்பூரில் நேற்று நடந்த லோக் அதாலத் நிகழ்வில், சாலை விபத்துகளில் உயிரிழந்த மூன்று பேர் குடும்பங்களுக்கு மொத்தம் 1.94 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.

இதுகுறித்த விவரங்கள் வருமாறு:

குன்னத்துாரைச் சேர்ந்தவர் கவுதம், 35. தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியர். இவர் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மோதி உயிரிழந்தார்.

அவர் தாயார் அவிநாசி சப்-கோர்ட்டில் இழப்பீடு வழக்கு தொடுத்தார். நேற்று நடந்த லோக் அதாலத்தில் விசாரிக்கப்பட்டு, 90 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.

l மங்கலத்தைச் சேர்ந்தவர் திவாகர் இன்பான்ட், 30. தனியார் நிறுவன ஊழியர். அவர் கோவையிலிருந்து மங்கலத்துக்கு பைக்கில் வந்த போது, நீலாம்பூர் அருகே லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார். அவர் குடும்பத்தினர் பல்லடம் கோர்ட்டில், இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இதில், 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.

l பல்லடத்தை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் பழனிசாமி, தாராபுரம் ரோட்டில் பைக்கில் சென்ற போது, சரக்கு வேன் மோதி உயிரிழந்தார். வழக்கு திருப்பூர் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் நடந்தது. பலியான பழனிசாமியின் குடும்பத்துக்கு, 64 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இழப்பீட்டுக்கான காசோலைகளை ஐகோர்ட் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் ஆகியோர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கினர்.

வழக்கு இல்லாத நிலை நிகழ்ச்சியில், ஐகோர்ட் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசியதாவது:

உலகில் உள்ள அனைத்து மதங்களும் சமாதானத்தை தான் போதிக்கிறது. அது போல் தேசிய மக்கள் நீதிமன்றமும் சமரச முயற்சியை மேற்கொள்கிறது. அதனை ஏற்று மக்களும் சமரச முடிவுகளுக்கு முன் வர வேண்டும். அதுதான் இந்த சமுதாயத்துக்கு நல்லது. லோக் அதாலத் வாயிலாக வழக்குகள் விரைவில் முடிவுக்கு வருவதால், வழக்குதாரர்கள் மற்றும் வக்கீல்களும் மகிழ்ச்சியடைகின்றனர்.

போக்குவரத்து கழகம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் சிறு விஷயங்களுக்காக வழக்கை தாமதப்படுத்துவது போன்வற்றைத் தவிர்க்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்தப்படும் நிலையில், அரசு அலுவலர்கள் அவற்றுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.வழக்குகள் இல்லாத கோர்ட்கள் என்ற நிலையை உருவாக்குவது இந்த சமுதாயம் சிறந்த சமுதாயமாக மாற உதவும். இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us