/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மூடப்பட்ட சர்க்கரை ஆலை; கரும்பு பதிவு யாருக்காக? விவசாயிகள் அதிருப்தி மூடப்பட்ட சர்க்கரை ஆலை; கரும்பு பதிவு யாருக்காக? விவசாயிகள் அதிருப்தி
மூடப்பட்ட சர்க்கரை ஆலை; கரும்பு பதிவு யாருக்காக? விவசாயிகள் அதிருப்தி
மூடப்பட்ட சர்க்கரை ஆலை; கரும்பு பதிவு யாருக்காக? விவசாயிகள் அதிருப்தி
மூடப்பட்ட சர்க்கரை ஆலை; கரும்பு பதிவு யாருக்காக? விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜூன் 10, 2025 09:29 PM

உடுமலை; அமராவதி சர்க்கரை ஆலை இரு ஆண்டுகளாக அரவை செய்யாமல் முடங்கியுள்ளதோடு, கோட்ட அலுவலகங்களும் மூடப்பட்ட நிலையில், தனியார் ஆலைகளுக்கு சாதகமாக கரும்பு பதிவு செய்யப்படுவதால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
உடுமலை கிருஷ்ணாபுரத்திலுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, 22 ஆயிரம் விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.
60 ஆண்டுக்கு முன் நிறுவப்பட்ட, பழமையான இயந்திரங்கள் பழுது காரணமாக, இரு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.
இதனை நவீனப்படுத்த, ரூ.100 கோடி நிதி ஒதுக்கவும், ஆறு ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வகையில், திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பியும், நிதி ஒதுக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள் பாதித்து வரும் நிலையில், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து ஆலை அரவைக்கு, கரும்பு பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டது.
கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வீரப்பன் கூறியதாவது:
அமராவதி சர்க்கரை ஆலை கட்டுப்பாட்டு பகுதிகளான, பழநி, கிழக்கு, மேற்கு, நெய்க்காரபட்டி, பல்லடம், குமரலிங்கம், கணியூர், தாராபுரம், உடுமலை தெற்கு, வடக்கு என, 9 கோட்ட கரும்பு அலுவலகங்கள் ஆலையால் அமைக்கப்பட்டு, விவசாயிகளிடம் நேரடியாக சென்று, கரும்பு பதிவு, பயிர்கடன், உரம் உள்ளிட்ட இடு பொருட்கள், சாகுபடி தொழில் நுட்பங்கள் வழங்கி வந்தனர்.
ஆலைக்கு என கரும்பு பெருக்கு அலுவலர், கோட்ட அலுவலகங்களில், கரும்பு அலுவலர், கள அலுவலர்கள், ஊழியர்கள் என பலர் பணியாற்றி வந்தனர்.
கரும்பு வெட்டுவது, போக்குவரத்து, கொள்முதல் தொகை வழங்கல் என அனைத்து பணிகளும் விவசாயிகளுக்கு அருகிலேயே கிடைத்து வந்தது. தற்போது, கோட்ட அலுவலகங்களும் முழுமையாக மூடப்பட்டது.
தனியார் ஆலைக்கு சாதகமாக, ஆளும்கட்சி அமைச்சர், கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க விடாமல் தடுத்து வருவதோடு, தனியார் ஆலைக்கு சாதகமாக, கரும்பு பதிவு செய்ய வேண்டும், என தெரிவித்து வருகின்றார்.
தனியாருக்கு வழங்கும் போது, கட்டுமானம் குறைவு, போக்குவரத்து கட்டணம், வெட்டுக்கூலி என பிடித்தும் செய்து, சொற்ப தொகையே வழங்கப்படுகிறது.இதனால், கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர்.
தர்ணா போராட்டம் நடத்திய போது, கரும்பு பதிவு செய்ய நோட்டீஸ் வழங்குகின்றனர். விவசாயிகள் 60 கி.மீ., துாரம் பயணம் செய்து, ஆலைக்கு வந்து பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பயனில்லை. தனியார் ஆலைக்கு மட்டுமே பயன் அளிக்கும்.
எனவே, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்.
இல்லையென்றால், கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பிரசாரம், ஆலை திறக்கும் வரை காத்திருப்பு போராட்டம் என பல கட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.