Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நீர்தேக்க தொட்டிகளை துாய்மைப்படுத்துங்க! ஒன்றிய நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்

நீர்தேக்க தொட்டிகளை துாய்மைப்படுத்துங்க! ஒன்றிய நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்

நீர்தேக்க தொட்டிகளை துாய்மைப்படுத்துங்க! ஒன்றிய நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்

நீர்தேக்க தொட்டிகளை துாய்மைப்படுத்துங்க! ஒன்றிய நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்

ADDED : மார் 26, 2025 08:58 PM


Google News
உடுமலை; ஊராட்சிகளில் உள்ள, மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் சுத்தம் செய்வதற்கு, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளில் மிகவும் முக்கியமானதாக குடிநீர் தேவை உள்ளது.

திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு நீரேற்றப்பட்டு, அதன் வாயிலாக குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் நடக்கிறது.

பொதுமக்களுக்கு துாய்மைான குடிநீர் வழங்குவதற்கு, குளோரினேஷன் செய்யப்படுவது மட்டுமின்றி, குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும்.

ஆனால் பெரும்பான்மையான ஊராட்சிகளில், தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் குளோரினேஷன் செய்தாலும், குடிநீர் துாய்மை இல்லாமல்தான் உள்ளது.

நீர்தேக்க தொட்டிகளில் உள்ள கழிவுகள், பாசி படர்ந்திருப்பதால் குடிநீரும் கலங்களாகவே உள்ளது. குடிநீர் துாய்மை இல்லாமல் வருவதால், பெரும்பான்மையான வீடுகளில் தற்போது 'கேன்' குடிநீர்தான் பயன்படுத்துகின்றனர்.

அதற்கான வசதி இல்லாத வீடுகளில் பலமுறை குடிநீரை வடிகட்டி, காய்ச்சிய பின்தான் குடிக்க வேண்டிய அளவுக்கு சுத்திகரிக்கப்படுகிறது.

இவ்வாறு அடிப்படையான சுத்தமான குடிநீர் தேவைக்கு, ஊராட்சி நிர்வாகங்கள் முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பது, பொதுமக்களுக்கு நோய் பாதிப்புகளை உண்டாக்குகிறது.

குறிப்பாக, பருவநிலை மாற்ற நேரங்களில் குழந்தைகளுக்கு சுத்திகரிப்பு இல்லாத குடிநீர் வாயிலாக, அதிகமான நோய்கள் பரவுகின்றன. மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பது தான், இப்பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுழற்சி முறையில் துாய்மைப்படுத்துவதற்கு, ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us