Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கணக்கெடுக்கும் போலீசார்: திணறடிக்கும் கிராமத்தினர்!

கணக்கெடுக்கும் போலீசார்: திணறடிக்கும் கிராமத்தினர்!

கணக்கெடுக்கும் போலீசார்: திணறடிக்கும் கிராமத்தினர்!

கணக்கெடுக்கும் போலீசார்: திணறடிக்கும் கிராமத்தினர்!

ADDED : மே 11, 2025 12:56 AM


Google News
திருப்பூர்: சமீபகாலமாக அண்மைக் காலமாக திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது.

இதில், வயது முதிர்ந்த தம்பதிகள் வசிக்கும் வீடுகளிலும், தனியாக உள்ள தோட்டங்களில் வீடு கட்டி வசிப்போர்; அருகில் வீடுகள் இன்றி தனியாக கட்டியுள்ள வீடுகளில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது.இதில் சில இடங்களில் கொள்ளை முயற்சியின் போது, வீட்டிலிருப்போர் தாக்கப்படுவதும், சில இடங்களில் கொலையாவதும் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அனைத்து பகுதிகளிலும், தோட்டத்து வீடுகளில் தனியாக வசிப்போர், வயதான தம்பதியர் தனியாக வசிக்கும் வசதியான வீடுகள் போன்றவற்றின் பாதுகாப்பு நடவடிக்கை உறுதிப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

அவ்வகையில், இது போன்ற பகுதிகளில் உரிய பகுதி போலீசார் தோட்டங்கள் மற்றும் தனியாக உள்ள வீடுகளில் நேரில் சென்று, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்குகின்றனர். மேலும், அவர்கள் குறித்த விவரங்களையும் பெற்றுப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் சில இடங்களில் தேவையற்ற அவதிக்குள்ளாகும் நிலையும் உள்ளது. தகவல் விவரங்கள் சேகரிக்கச் செல்லும் இடங்களில் ஒன்று அல்லது இரண்டு உள்ளூர் போலீசார் செல்கின்றனர்.

கிராமத்து தோட்டத்து வீடுகளில் வசிக்கும் முதியோர் போலீசார் சீருடையில் இருந்தாலும், அவர்களிடம் அடையாள அட்டை உள்ளதா, ஆதார் உள்ளிட்ட சுய விவரங்கள் கேட்கிறீர்கள்; அதன் நோக்கம் என்ன என்பது போன்ற கேள்விகளை முன் வைக்கின்றனர். போலீசார் என்ற பெயரில் யாரும் அத்துமீறி விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் சிலர் இவ்வாறு கேட்கின்றனர்.

இந்த நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் தான் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது என்பதற்கான எந்த ஆதாரமும் அவர்களிடம் இருப்பதில்லை. ஒரு சில பகுதிகளில் இந்த நடவடிக்கை குறித்த முழு விழிப்புணர்வு இல்லாத நிலையும் உள்ளது.

இதற்கு தீர்வு காணும் வகையில் போலீசார் உரிய வகையில் இது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். உள்ளூர் பகுதியில் அறிமுகமில்லாத போலீசார் இப்பணிக்குச் செல்லும் போது, அப்பகுதியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய் துறையினர் உடன் செல்ல வேண்டும். அதன் மூலம் இது போன்ற சங்கடங்கள் தவிர்க்கப்படும்.

கணக்கெடுக்கச் செல்லும் சில பகுதிகளில் அந்த இடம் குறித்த விவரங்கள் கூட போலீசாரிடம் இல்லாமல் போவதும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us