Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சரக்கு முனையத்தில் வெள்ளம்; ரூ.150 கோடி சேதம்? காப்பீட்டு நிறுவனத்தின் மேலாய்வு துவங்கியது

சரக்கு முனையத்தில் வெள்ளம்; ரூ.150 கோடி சேதம்? காப்பீட்டு நிறுவனத்தின் மேலாய்வு துவங்கியது

சரக்கு முனையத்தில் வெள்ளம்; ரூ.150 கோடி சேதம்? காப்பீட்டு நிறுவனத்தின் மேலாய்வு துவங்கியது

சரக்கு முனையத்தில் வெள்ளம்; ரூ.150 கோடி சேதம்? காப்பீட்டு நிறுவனத்தின் மேலாய்வு துவங்கியது

ADDED : ஜன 11, 2024 07:17 AM


Google News
திருப்பூர்: துாத்துக்குடி துறைமுக சரக்கு முனையத்தில், மழையால் சேதமான, 150 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளுக்கு, இழப்பீடு வழங்குவதற்கான மேலாய்வு தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பூர் பின்னலாடைகள் உட்பட, தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருட்கள், துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. எண்ணுார், சென்னை மற்றும் 17 சிறுதுறைமுகங்கள் வாயிலாகவும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான சரக்கு பரிவர்த்தனை நடந்து வருகிறது.

கடந்த மாதம் கனமழை பாதிப்பால், துாத்துக்குடி துறைமுக பகுதிகளிலும் மழை வெள்ளம் புகுந்தது. சரக்கு முனைய கிடங்குகளுக்குள், சேறும், சகதியுமாக வெள்ளம் புகுந்ததால், பொருட்கள் கடும் சேதமடைந்தன. குறிப்பாக, திருப்பூரில் இருந்து ஏற்றுமதிக்காக அனுப்பிய பின்னலாடைகள் கடுமையான சேதமடைந்துள்ளன. உடனடியாக துாத்துக்குடி விரைந்த குழுவினர், நல்ல நிலையில் உள்ள சரக்குகளை மீட்டு வந்துள்ளனர்.

எடுத்துவரப்பட்ட சரக்குகளை சரிபார்த்து, கொச்சின் துறைமுகம் மூலமாக அனுப்பி வைத்தனர். சேதமான சரக்குகளுக்கு, இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதால், அவற்றிற்கு இழப்பீடு பெறுவதற்கான முயற்சி நடந்து வருகிறது.

ஏற்றுமதி செய்யும் சரக்குகளுக்கு, கப்பலில் செல்ல தனியே இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது; அதுமட்டுமின்றி, சரக்கு முனையத்தில் சரக்கு வைக்கவும், தனியே இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில், சேதமான சரக்குகளுக்கு முழுமையான காப்பீடு பெறுவதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'மழை வெள்ளம் புகுந்ததால், ஐந்து சரக்கு முனையங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக, பனியன் ஆடைகள் வைத்திருந்த முனையங்களிலும், சேற்றுடன் தண்ணீர்புகுந்து சேதமாகியது. நல்ல நிலையில் இருந்த ஆடைகளை மீட்டுள்ளோம்; சேதமான பொருட்களுக்கு, உரிய இழப்பீடு பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது,' என்றனர்.

இதுகுறித்து சரக்குமுனைய நிர்வாக அலுவலர்கள் கூறியதாவது:

மழை வெள்ளம் புகுந்ததால், ஐந்து முனையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு வாரத்துக்குள், வழக்கமான கப்பல் சரக்கு போக்குவரத்து துவங்கிவிட்டது; இயல்பு நிலை திரும்பிவிட்டது.

நல்லநிலையில் இருந்த பொருட்களை மட்டும், உரிமையாளர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். சேதமான பொருட்கள் அப்படியே வைக்கப்பட்டுள்ளன; சுங்கத்துறை அதிகாரிகள் ஒப்புதலுடன், காப்பீடு பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டபடி, சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தினர், மேலாய்வு நடத்தி வருகின்றனர். ஆய்வு நடந்து வருவதால், சேதமான பொருட்கள் அகற்றப்படவில்லை. முதல்கட்ட சரிபார்ப்பு முடித்து, சேதத்தை மதிப்பீடு செய்து, ஒப்புதல் பெற்ற பிறகே சேதமான சரக்குகளை அகற்ற முடியும். ஏற்றுமதி சரக்குகள் மட்டுமல்ல, இறக்குமதியான சரக்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மழை வெள்ளத்தால், 150 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் சேதமாகியிருக்குமென, உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலாய்வு முடிந்த பிறகே, முழுமையான சேதம் குறித்த தகவல் தெரியவரும்; அதற்குபிறகே, இழப்பீடு பெறுவதற்கான நடவடிக்கையும் நிறைவு பெறும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us