/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உயிர்களை 'காவு' வாங்கியும் உணர மறுக்கலாமா?உயிர்களை 'காவு' வாங்கியும் உணர மறுக்கலாமா?
உயிர்களை 'காவு' வாங்கியும் உணர மறுக்கலாமா?
உயிர்களை 'காவு' வாங்கியும் உணர மறுக்கலாமா?
உயிர்களை 'காவு' வாங்கியும் உணர மறுக்கலாமா?
ADDED : ஜன 29, 2024 12:14 AM

பல்லடம்;தேசிய நெடுஞ்சாலையில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்கள், பல்லடத்தில், இரு உயிர்கள் பறிபோவதற்கு காரணமாக அமைந்துள்ளன.
பல்லடம், பொங்கலுார், தில்லைநகரை சேர்ந்த சீனிவாச ராவ், 56; இவரது பேரன் அயன் 6 ஆகிய இருவரும், நேற்று முன்தினம் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தனர். பல்லடத்தில் இருந்து பொங்கலுார் நோக்கி டூ வீலரில் செல்லும்போது, பின்னால் வந்த லாரி மோதி பலியாயினர்.
வழக்கமாக, பல்லடம் பனப்பாளையம் முதல் மாதப்பூர் வரை பேக்கரிகள், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள், வாகன சர்வீஸ் சென்டர்கள் உள்ளிட்ட பலவும் அதிக அளவில் உள்ளன. பேக்கரிகளில் டீ குடிக்கவும் வாகனங்களை சீரமைக்கவும் வேண்டி வரும் வாகன டிரைவர்கள், தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டோரத்திலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். குறிப்பாக, லாரிகள் அதிக அளவில் நிறுத்தப்படுவதே, வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. ரோட்டில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களில் இருந்து விலகி, வலது புறமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் வரும் வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாவது அதிக அளவில் நடக்கிறது. கடந்த காலங்களில் நடந்த பல்வேறு விபத்துகளில், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
தற்போது, ரோடு விரிவாக்க பணியும் நடந்து வரும் சூழலில், வாகனங்கள் இதுபோல் ரோட்டில் பார்க்கிங் செய்யப்படுவது, பெரும் விபத்துக்கு வழிவகுக்கும். இப்பகுதியில் விபத்துகள், உயிரிழப்புகள் நடந்த பின்னும், போலீசார் இதுகுறித்து ஆய்வு செய்யாமல் அலட்சியத்துடன் விட்டுவிடுகின்றனர்.
இவ்வாறு, அலட்சியப்படுத்தியதன் விளைவாக, நேற்று முன்தினம், பொங்கலுாரை சேர்ந்த குடும்பம், இரு உயிர்களை பிரிந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சாதாரண வாகன பார்க்கிங் விஷயம்தான் என்றாலும், இது உயிரைப் பறிக்கும் செயலுக்கு காரணமாக அமைந்துவிட்டது.
கண்காணிப்பு பணியை போலீசார் தீவிரப்படுத்தி, ரோட்டோரத்தில் வாகனங்கள் இடையூறாக நிறுத்துவதை தடுக்க வேண்டும்.