Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சகோதர பாசம்; கற்றுத்தரும் கம்பராமாயணம்!

சகோதர பாசம்; கற்றுத்தரும் கம்பராமாயணம்!

சகோதர பாசம்; கற்றுத்தரும் கம்பராமாயணம்!

சகோதர பாசம்; கற்றுத்தரும் கம்பராமாயணம்!

ADDED : ஜூன் 07, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
'அண்ணன் - தம்பி எப்படி வாழ வேண்டும் என்ற இலக்கணத்தை, கம்பராமாயணம் கற்றுக் கொடுக்கிறது' என, பட்டிமன்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, கடந்த 2ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கோவிலில் தினமும் மாலை, மேடை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நேற்று முன்தினம் மாலை, 'கம்பன் காவியத்தில் பெரிதும் மெய் சிலிர்க்க வைக்கும் உறவு, 'கணவன் - மனைவியே' என்ற தலைப்பில் கவிநிலவன், சித்ரா ஆகியோரும்; 'அண்ணன் - தம்பியே' என்ற தலைப்பில் தீபக், கோகிலா ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன், நடுவராக செயல்பட்டார்.

நீடித்த பந்தம்


'கணவன் - மனைவியே அணியினர் பேசுகையில், ''கம்பன் காவியம் எழுந்ததே, பிறர்மனை நோக்காமை என்கிற அறத்தை நிலை நாட்டுவதற்கே. முதன் முதலில் ஒரு ஆணும், பெண்ணும் தோன்றியவுடன் அவர்களை, கணவன் - மனைவி என்கிற உறவில் இணைத்தார் இறைவன். அறத்தின் மூர்த்தியான ராமன் சில இடங்களில் அறத்தை விட்டு தடுமாறுவதற்கும், திருமண உறவே காரணமாக இருந்திருக்கிறது. சுக்ரீவனின் மனைவியை வாலி, கவர்ந்து சென்றான். மனைவியை பிரிந்து கணவனால் இருக்க முடியாது. கம்பன் காவியம் முழுவதும், சீதை, ராமனுடனேயே பயணிக்கிறாள்,'' என்றனர்.

நிலையான சொந்தம்


'அண்ணன் - தம்பி உறவே' அணியினர் பேசுகையில், ''கம்பராமாயணத்தின் மையக்கருத்து, பிறன்மனை நோக்காமை, அறம் வெல்லும்; பாவம் தோற்கும் என்பது. கம்ப ராமாயணத்தில், சகோதரத்துவம் என்ற மூன்றாவது மையக்கருத்து ஒன்றும் இருப்பதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ராமனோடும், சீதையோடும் இருந்த தம்பிகள் தான், கணவன் மனைவி பிரிவு துயரத்தை துடைத்தவர்கள். கம்பராமாயணத்தில் கணவன் - மனைவி உறவு நிலைத்திருக்க, உயர்ந்து நிற்க அச்சாணியாக இருந்தது அண்ணன் - தம்பி உறவுதான்'' என்றனர்.

சகோதர இலக்கணம்!


நடுவர் ராமகிருஷ்ணன் தீர்ப்பளித்து பேசியதாவது:

'பரதன் நாட்டை ஆளவேண்டும்; நீ காட்டுக்குச் செல்ல வேண்டும்' என தாய் கைகேயி கூறிய போது, ராமனின் முகம், அன்று மலர்ந்த செந்தாமரை மலரையும் மிஞ்சும் அளவு மலர்ந்து காணப்பட்டது. தம்பி லட்சுமணனோ, அண்ணன் ராமனுக்கு துணையாக, காட்டில் 14 ஆண்டுகள் இமை மூடாமல், கவலையோடு நின்றிருந்தார். பரதனோ, அரச பதவி கிடைத்த போதும் பொருட்படுத்தாமல், தன்மீதான பழியையும் ஏற்றுக்கொண்டு, அண்ணனை தேடி காட்டுக்கு வந்தார். இறைவன் கொடுத்த வரம், தாய்- தந்தை உறவு. சக உதிரமாக, சம உரிமையோடு பிறந்தவர்கள் தான், அண்ணன்- தம்பியர். கம்பராமாயணம், அண்ணன் - தம்பியர் எப்படி வாழவேண்டும் என்ற இலக்கணத்தை கற்றுக்கொடுக்கிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us