Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிறந்த நண்பர்கள் கல்லுாரி பருவத்தில் அவசியம்

சிறந்த நண்பர்கள் கல்லுாரி பருவத்தில் அவசியம்

சிறந்த நண்பர்கள் கல்லுாரி பருவத்தில் அவசியம்

சிறந்த நண்பர்கள் கல்லுாரி பருவத்தில் அவசியம்

ADDED : ஜூன் 22, 2025 06:54 AM


Google News
திருப்பூர் : கவுன்சிலிங் நடைமுறைகள் முடிவுற்று, முதன்முதலாக கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் இளநிலை முதலாம் ஆண்டில் மாணவர்கள் அடியெடுத்து வைத்துள்ளனர். ''கல்லுாரி படிப்பில் முழுமையான கவனம் தேவை; சிறந்த நண்பர்கள் அவசியம்'' என்கின்றனர் பேராசிரியர்கள்.

கல்வியில் நாட்டம்


பாலசுப்ரமணியன், தமிழ்த்துறை தலைவர், சிக்கண்ணா அரசு கல்லுாரி:

ஆசிரியர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டது பள்ளி பருவம். கல்லுாரி என்பது பக்குவப்பட்ட வயது. யதார்த்த வாழ்க்கையை விட்டுவிட்டு, கற்பனையான உணர்வு வாழ்வதுபோல் தோன்றினாலும், அவை சந்தோஷத்துக்கு மட்டுமே இருக்கவேண்டும். கல்லுாரிக்கு சென்று விட்டார்களே... அப்புறம் என்ன என விடாமல், பெற்றோரும் பொறுப்புடன் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.

ஆசிரியர் கடமை, அறம் சார்ந்த பாடங்களை கற்பிப்பது; அதன்படி, நடக்க வேண்டியது மாணவர்கள். பள்ளி படிப்பில் நண்பர்கள் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களாக இருப்பர்; கல்லுாரியில் பல ஊர்களில் இருந்து பலரும் வருவர். நட்பு நல்லதாக இருக்க வேண்டும்; சிறந்த நண்பர்களை அமைத்துக்கொள்ள வேண்டும். துவக்கம் முதலே பெற்றோரின் சிரமங்களை உணர்ந்து கல்வியில் நாட்டம் செலுத்த வேண்டும். கல்லுாரி ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி தரும்; அதன்படி நடப்பது படிப்பவரின் கடமை.

உடற்பயிற்சி அவசியம்


உஷா, விளையாட்டுத்துறை பேராசிரியர், எல்.ஆர்.ஜி., அரசு மாணவியர் கல்லுாரி:

உடல் ஆரோக்கியமே மன ஆரோக்கியத்தின் அடிப்படை. 'ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா' என பாரதி அன்றே கூறியுள்ளார். விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவியர் கல்லுாரியில் இணைந்த நாள் முதல், மைதானத்தில் நேரம் செலவிட வேண்டும்.

மாணவியர் பெண்களாக மாறி அடுத்த தலைமுறை வாரிசாக கூடியவர்கள் அதற்கேற்ற உடல் நலத்துடன் இருக்க உடற்பயிற்சியும், விளையாட்டும் மிக அவசியம். பள்ளி காலங்களில் விளையாட்டு போட்டிகளில் திறமை காட்டியவர்கள்; கல்லுாரிகளில் அதனை தொடர வேண்டும்.

அதற்கேற்ற அனைத்து கட்டமைப்புகளும் நம் அரசுக் கல்லுாரிகளில் உள்ளது. அனைத்து மாணவியரும் கல்வியாண்டு துவக்கம் முதலே விளையாட்டு போட்டி மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us