ADDED : ஜூலை 23, 2024 11:41 PM

திருப்பூர் கிளை, இந்திய பட்டய கணக்காளர் சங்க தலைவர் ஆடிட்டர் செந்தில்குமார்:
தனிநபர் வருமான வரியை பொருத்தவரை, சம்பளம் பெறுவோருக்கான நிலையான கழிவு, 50 ஆயிரமமாக இருந்தது, 75 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது. புதிய வரி விதிப்பு முறையில், 2025 - 26 வரி மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி விகிதத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் மூலம் நன்மை கிடைக்கும்.
உதாரணமாக, 15 லட்சம் ரூபாய் வருமானம் பெறும் தனிநபர் அல்லது கூட்டுக் குடும்பம் அல்லது தனி நபர் கூட்டமைப்பு அதிகபட்சமாக, 10 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும். குறைந்த வருமானம் ஈட்டும் நபர்களுக்கு, செலுத்த வேண்டிய வருமான வரியில் சிறிய சலுகை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நிதி அமைச்சரின் அறிக்கையில், 'கேபிட்டல் கெயின்' எனப்படும், நிலையான சொத்து பரிவர்த்தனை மீதான வருமான வரியில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நிதி சார்ந்த சொத்துக்கள் மீதான குறுகிய கால முதலீட்டு லாபத்திற்கான வரி விகிதம் 15 சதவீதத்திலிருந்து, 20 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருப்பது முதலீட்டருளுக்கான வரிச் சுமையை அதிகரிக்கும்.
நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத நீண்டகால முதலீட்டு லாபத்திற்கான வரி விகிதம், 12.5 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதால், நிலம் சார்ந்த விற்பனைக்கான வரி குறைய வாய்ப்புள்ளது. 'விவாத் சே விஸ்வாஸ்' எனும் வருமானவரி குறைதீர்ப்பு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியை பொறுத்தவரை, 53வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் கூறியதை போல், 2017 மார்ச் 2020 வரை நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி., யை அரசு குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் செலுத்தி விட்டால் வட்டி மற்றும் அபராதம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.