/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அக்னி பிரளயத்தில் அடைக்கலம் அளித்த அவிநாசிஅக்னி பிரளயத்தில் அடைக்கலம் அளித்த அவிநாசி
அக்னி பிரளயத்தில் அடைக்கலம் அளித்த அவிநாசி
அக்னி பிரளயத்தில் அடைக்கலம் அளித்த அவிநாசி
அக்னி பிரளயத்தில் அடைக்கலம் அளித்த அவிநாசி
UPDATED : ஜன 13, 2024 01:52 PM
ADDED : ஜன 13, 2024 02:02 AM

அவனருளாலே அவன்தாள் வணங்கி 63 நாயன்மார்களிடம் பெறலாம் அருளாசி
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
அகிலம் முழுவதும், சிவனடியார்கள் இறைபக்தியில் தழைத்து, சிவபதம் அடைந்துள்ளனர். வானுயர கோவில் கட்டியவராக இருந்தாலும், பச்சிலையை கொண்டு பரமனை பூஜித்தவராக இருந்தாலும், உண்மையான பக்திக்கு எல்லாம் வல்ல ஈசன், அருள்செய்து ஆட்கொண்டிருக்கிறார்.
அவிநாசிலிங்கேஸ்வரர், அவிநாசிநாதர், அவிநாசியப்பர் என்றெல்லாம் பூஜிக்கப்படும் எம்பெருமானை, பிரம்மதேவன் பூஜித்து அருள் பெற்றதால், பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயருடனும் அருள்பாலிக்கிறார். அவிநாசி கோவிலில் உள்ள கல்வெட்டுகளில், அவிநாசியாளுடையார், அவிநாசியாளுடை நாயகர், அவிநாசியாண்டார் என்றெல்லாம் பெயரிடப்பட்டுள்ளது.
ஈசனை வேண்டி வலப்பாகம் பெற்ற பார்வதிதேவிக்கு, கருணாலய செல்வி, கருணாம்பிகை, பெருங்கருணையம்மை என்றெல்லாம் பெயர் உள்ளது. அவிநாசியில் கோவில் கொண்ட அம்மையப்பரை, நாயன்மார்கள் புகழ்பட பாடியுள்ளனர்.
சுந்தரமூர்த்திநாயனார், அவிநாசி தாமரைக்குளத்தில் பாடி, முதலையுண்ட பாலனை மீட்டுக்கொடுத்த வைபவம் இன்றும் புகழ்பரப்பி வருகிறது. 'அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய்' என்று அப்பர் பாடியுள்ளார். 'அரிய பொருளே... அவிநாசியப்பா' என்று மாணிக்கவாசகரும், தனது மணி வாசகங்களால் பாடியுள்ளார்.
'கொடுத்தான் முதலைகொள் பிள்ளை குயிரன்று புக்கொளியூர்' என்று, நம்பியாண்டார் நம்பிகளும், 'முதலைவாய் நின்றும் அழைத்து கொடுத்த அவிநாசி' என்று சேக்கிழாரும், 'அறநாலை புகல்வோனே அவிநாசி பெருமாளே' என்று அருணகிரிநாதரும் பாடியுள்ளார்.
இப்படியாக, உலகை அருளாட்சி செய்யும் சர்வேஸ்வரனால் ஆட்கொள்ளப்பட்ட, 63 நாயன்மார்கள் அவிநாசி பெரியகோவிலில், எம்பெருமான் வீற்றிருக்கும் வளாகத்தின் தென்புற திருமாளிகை பத்தி திருமண்டபத்தில், அவிநாசியப்பரை வணங்கியபடி காட்சியளிக்கின்றனர். அதே மண்டபத்திலேயே தேவாரம் பாடிய மூவரும், மாணிக்கவாசகருடன் நால்வராக சிவபெருமானை நினைந்து காட்சியளிக்கின்றனர்.
அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருமேனியை தாங்கி வந்த பீடங்களை அகற்றிவிட்ட, புதிய கருங்கல் பீடம் தயாராகியுள்ளது. குருபூஜைகள் நடந்து வருவதால், அபிேஷக தீர்த்தம், பாதத்தில் படாதபடி, சிறிய கால்வாய் வழியாக வழிந்தோடும் வகையில், திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பக்தர்களுக்காக கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கும் அவிநாசியப்பரை, தெற்கிருந்து வடக்கு நோக்கி வணங்கியவண்ணம், காரைக்கால் அம்மையார் அமர்ந்திருக்கிறார். மற்ற நாயன்மார்கள் கரம்குவித்து நின்றவாறு சேவிக்கின்றனர்.
கும்பாபிேஷக யாகசாலை பூஜைகள் துவங்கியும், அஷ்டபந்தன மருந்து, யந்திரங்கள் சாற்றி, திருமேனிகள் பீடத்தின் மீதான பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பீடம், தீர்த்தம் செல்வதற்கான கோமுகி தயாராகிவிட்ட நிலையில், நேற்று சிவனடியார்கள் கரசேவையில், நாயன்மார் திருமேனிகள் துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த அவிநாசி பெரிய கோவில் கும்பாபிேஷகம், பிப்., 2ம் தேதி நடக்கிறது. அதற்காக, 80 குண்டங்களுடன், யாகசாலை வண்ணமயமாக தயாராகி வருகிறது. அவிநாசியில் அரசாளும் அவிநாசியப்பரின் அருள்பெற அனைவரும் வருகை தர வேண்டுமென, கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.