ADDED : ஜன 05, 2024 11:47 PM
திருப்பூர்;பூண்டி நகராட்சி பகுதியில் நீர்நிலையை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்வதாக, தொடர்ந்து சர்ச்சை கிளம்புகிறது. திருமுருகன்பூண்டி நகராட்சி, வார்டுக்குட்பட்டு காமாட்சியம்மன் நெசவாளர் காலனி உள்ளது.
இங்கு, 300க்கும் மேற்பட்ட வீடுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, ஒரு ஏக்கர் வரையிலான நிலம், ரிசர்வ் சைட்டாக உள்ளது. இப்பகுதியை ஒட்டிய, மழைநீர் வழிந்தோடி செல்வதற்கு ஏதுவாக, நீர்வழித்தடமும், ஒரு ஏக்கர் பரப்பளவில், நீர்நிலை படுகையும் உள்ளது.
இந்நிலையில், கடந்தாண்டு இப்பகுதியை சேர்ந்த தனியார் சிலர், நீர்நிலையை ஆக்கிரமித்து, தடுப்புச்சுவர் அமைக்க குழி தோண்டினர். இதையறிந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று, வருவாய்த்துறையினர் அங்கு நில அளவை செய்தனர். 'மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலை இடம் ஆக்கிர மிக்கப்பட்டிருக்கிறது' என்பது அதிகாரிகளின் கள ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு தனியார் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த தடுப்புச்சுவர் கட்டும் பணி நிறுத்தப்பட்டது; இதனால், 6 கோடி ரூபாய் மதிப்புள்ள, 75 சென்ட் நிலம் பாதுகாக்கப்பட்டது.
அதே போன்று, சில நாட்களுக்கு முன் மீண்டும் அப்பகுதியில் சிலர் நீர்நிலையை ஆக்கிரமித்து, கட்டுமானப்பணி மேற்கொள்ள முயற்சி மேற்கொள்வதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். இதையடுத்து, நேற்று பூண்டி நகராட்சி மற்றும் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்தில் நில அளவை செய்தனர்.