/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மானியத்திட்டத்துக்கு அரசு நிதி ஒதுக்காததால்... கனவாகும் வீடு!ஓராண்டுக்கு மேல் காத்திருப்பதால் வேதனைமானியத்திட்டத்துக்கு அரசு நிதி ஒதுக்காததால்... கனவாகும் வீடு!ஓராண்டுக்கு மேல் காத்திருப்பதால் வேதனை
மானியத்திட்டத்துக்கு அரசு நிதி ஒதுக்காததால்... கனவாகும் வீடு!ஓராண்டுக்கு மேல் காத்திருப்பதால் வேதனை
மானியத்திட்டத்துக்கு அரசு நிதி ஒதுக்காததால்... கனவாகும் வீடு!ஓராண்டுக்கு மேல் காத்திருப்பதால் வேதனை
மானியத்திட்டத்துக்கு அரசு நிதி ஒதுக்காததால்... கனவாகும் வீடு!ஓராண்டுக்கு மேல் காத்திருப்பதால் வேதனை
ADDED : ஜன 04, 2024 09:02 PM
உடுமலை:அரசு தரப்பில், பல முறை விபரங்களை சேகரித்து, ஓராண்டுக்கு மேலாகியும் இலவச வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், 3 ஒன்றியங்களிலும், நுாற்றுக்கணக்கான பயனாளிகள் வேதனையில் உள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், 72 ஊராட்சிகள் உள்ளன. முன்பு மத்திய, மாநில அரசு சார்பில், கிராமங்களில், மானியத்தில் வீடு கட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தது.
இத்திட்ட பயனாளிகள், கிராம சபையில் தேர்வு செய்யப்பட்டு, சிமென்ட் மற்றும் இதர கட்டுமான பொருட்கள், ஒன்றிய அலுவலகத்தின் வாயிலாக வழங்கப்படும்; மொத்த ஒதுக்கீடான, 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயில், கட்டுமான பொருட்களுக்கான தொகை கழித்து, பிற தொகை, தவணை முறையில், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
பின்னர், அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், சோலார் மின் உற்பத்தி கட்டமைப்புடன், பசுமை வீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், இத்திட்டம் கைவிடப்பட்டு, திட்டத்தின் பெயர், கலைஞர் வீடு கட்டும் திட்டம் என மாற்றப்பட்டது.
திட்டத்தின் கீழ், கிராமங்களில், கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, வீடுகள் தேவைப்படுவோர் பட்டியல் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, பயனாளிகள் எதிர்பார்த்திருந்தனர்.
மூன்று ஒன்றியங்களிலும், 200க்கும் மேற்பட்ட பயனாளிகள் திட்டத்தின் கீழ் பணிகளை துவக்க காத்திருந்தனர். இந்நிலையில், பயனாளிகள் குறித்து துல்லிய விபரங்களை சேகரித்து, மொபைல் செயலியில், பதிவேற்றம் செய்ய அரசு அறிவுறுத்தியது. இப்பணிகள் மூன்று மாதங்களுக்கு மேல் மேற்கொள்ளப்பட்டது.
திட்ட விதிகளின் கீழ், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, தகுதியுள்ள பயனாளிகள் பட்டியல் ஆன்லைன் வாயிலாக, ஊராட்சிகளில் இருந்து ஒன்றிய நிர்வாகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
ஒவ்வொரு ஒன்றியங்களில் இருந்தும், நிதி ஒதுக்கீட்டுக்காக அரசுக்கு கருத்துருவும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளாக இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதனால், கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள முடியாமல், வீடும் இல்லாமல், பயனாளிகள் பரிதவித்து வருகின்றனர்.
திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்கள் கூறியதாவது: அரசு மானியத்தை பயன்படுத்தி வீடு கட்ட திட்டமிட்டிருந்தோம். அதிகாரிகள் தரப்பிலும், பல முறை ஆய்வு செய்து, விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்து, ஓராண்டாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆண்டுதோறும் கட்டுமான பொருட்கள் விலை, இதர செலவினங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால், அரசு ஒதுக்கும் மானியத்தில் வீடு கட்டுவது கேள்விக்குறியாகியுள்ளது.
கடன் வாங்கியும் பணிகளை துவக்க முடியாமல், தவித்து வருகிறோம். மானியம் கிடைக்குமா என்பது குறித்து அரசு தரப்பில், உரிய விளக்கமளிக்க வேண்டும். மானியத்துக்கான தொகையை உயர்த்தி, உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
ஊராட்சிகளில் புகார்
வீடு கட்டும் திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்கள், ஒவ்வொரு கிராம சபையிலும், நிதி ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்புகின்றனர். ஒன்றிய அலுவலகத்துக்கும் சென்று, விண்ணப்பத்தின் நிலையை தெரிவிக்குமாறு மனு கொடுக்கின்றனர்.
இதனால், ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினரும் இத்திட்டத்துக்கு எப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.