Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அதிநவீனப்பாதையில் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்; 50 சதவீத மூலதன மானியம் வழங்குமா மத்திய அரசு?

அதிநவீனப்பாதையில் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்; 50 சதவீத மூலதன மானியம் வழங்குமா மத்திய அரசு?

அதிநவீனப்பாதையில் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்; 50 சதவீத மூலதன மானியம் வழங்குமா மத்திய அரசு?

அதிநவீனப்பாதையில் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்; 50 சதவீத மூலதன மானியம் வழங்குமா மத்திய அரசு?

UPDATED : ஜூலை 01, 2025 07:44 AMADDED : ஜூலை 01, 2025 12:08 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; திருப்பூர் பின்னலாடைத்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கோலோச்சப்போகிறது. அதிநவீனப்பாதையைத் தொடர உள்ள பின்னலாடை ஏற்றுமதி யாளர்களுக்கு, 50 சதவீத மூலதன மானியத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, திருப்பூருக்கு நேற்று வந்த மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சரிடம் முன்வைக் கப்பட்டது.

''ஏ.ஐ.,(செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை செயல்படுத்த, 50 சதவீத மூலதன மானியம் வழங்க வேண்டும்'' என்று, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில், மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா பங்கேற்ற, தொழில் அமைப்புகளுடான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மத்திய ஜவுளித்துறை கமிஷனர் அலுவலக நிதிப்பிரிவு இயக்குனர் விஜய்தார் சவ்பே, ஏற்றுமதியாளர் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர் ராஜ்குமார், இணைச்செயலாளர் குமார் துரைசாமி முன்னிலை வகித்தனர். துணை தலைவர் இளங்கோவன் வரவேற்றார்.

ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசியதாவது:நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், திருப்பூர் 60 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது; கடந்தாண்டில், 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. முந்தைய ஆண்டை காட்டிலும், 25 சதவீதம் வளர்ச்சி கிடைத்துள்ளது. வரும் ஆண்டில், ஒட்டுமொத்தமாக, 15 சதவீத வளர்ச்சி கிடைக்கும்; வரும் 2030ல், ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். திருப்பூரில், 90 சதவீதம் பருத்தி; 10 சதவீதம் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி நடக்கிறது. உலக வர்த்தக வாய்ப்புகளை பெற, 2030ம் ஆண்டுக்குள், 70 சதவீதம் பருத்தி, 30 சதவீதம் செயற்கை நுாலிழை ஆடை என்ற நிலையை அடைவோம்.

வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்


பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால், 10 சதவீதம் வர்த்தகம் அதிகரிக்கும்; திருப்பூர் வளர்ச்சியில் ஓர் மைல்கல்லாக இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பாவுடன் வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறும் போது, நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, 2030ல், ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.

தொழில்நுட்ப மேம்பாடு


'டப்' என்ற தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் முடிந்த பின், ஜவுளித்துறையை நவீனமாக்கும் முயற்சியில் சிக்கல் நிலவுகிறது. திட்டமிட்டுள்ளபடி, 15 சதவீத வளர்ச்சியை தக்கவைக்க, தொழில்நுட்ப மேம்பாடு மிக அவசியம். குறிப்பாக, 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தை செயல்படுத்த அதிக முதலீடு செய்ய வேண்டும். புதிய மூலதன முதலீட்டுக்கு, 50 சதவீத மானியம் வழங்க வேண்டும்.

மேற்கூரை சூரிய ஒளி மின் கட்டமைப்பு


திருப்பூரின் மின்கட்டண செலவை குறைக்க, சூரிய ஒளி மின் சக்தியை பயன்படுத்த வேண்டும். அதற்காக, 'ரூப்டாப்' என்ற மேற்கூரை சோலார் பயன்படுத்தி வருகின்றனர். குறு, சிறு நிறுவனங்கள், மேற்கூரை சூரிய ஒளி மின் கட்டமைப்பை அமைக்க, 90 சதவீதம் மானியம் வழங்கி உதவ வேண்டும். திருப்பூரின் பசுமை சார் உற்பத்தியை ஊக்குவிப்பதாகவும் இருக்கும். பல்வேறு வகையான வரியினங்களை, ஏற்றுமதியின் போது வரி செலுத்துவதில் சரிக்கட்டும் திட்டத்தை, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். சர்வதேச ஏற்றுமதி வர்த்தகத்தில் புதிய உயரத்தை எட்ட, இத்தகைய போட்டித் தன்மையை மேம்படுத்தும் அத்தியவாசிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

மனுக்களை வழங்கிய தொழில்துறையினர்


ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) துணை தலைவர் ராமு கொடுத்த மனுவில்,' திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பு ஆண்டில், 50 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும். விரைவில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி மேம்படும். 'பி.எல்.ஐ., -2.0' திட்டத்தை, 25 கோடி ரூபாய் முதலீடு என்ற மறுசீரமைப்புடன் செயல்படுத்த வேண்டும். கட்டுப்பாடற்ற பின்னல் துணி இறக்குமதிக்கு அனுமதிக்க வேண்டும். புதிய செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி நிறுவனம் துவங்க, 25 சதவீத முதலீட்டு மானியம் வழங்க வேண்டும். 'பி.எம்., - மித்ரா' திட்டத்தில், 30 சதவீத முதலீட்டு மானியம் வழங்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் (சைமா) தலைவர் ஈஸ்வரன், துணை தலைவர் பாலச்சந்தர், சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜ், பொதுச்செயலாளர் முருகசாமி, பொருளாளர் மாதேஸ்வரன், 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த், 'டிப்' தலைவர் மணி, 'சிம்கா' தலைவர் விவேகானந்தன் ஆகியோர், கோரிக்கை மனுக்களை, அமைச்சரிடம் வழங்கினர்.

ஜெய் திருப்பூர்... ஜெய் பாரத்

மத்திய இணை அமைச்சர், கூட்ட அரங்கிற்கு வந்ததும், அமர்ந்திருந்த தொழில் அமைப்பு நிர்வாகி ஒவ்வொருவருடன் கை குலுக்கி, நலம் விசாரித்தார். அமைச்சருக்கு, திருப்பூரில் உற்பத்தியான மறுசுழற்சி ஆடைகளை பரிசாக வழங்கிய போது, 'நானே உங்கள் ஆடைகளுக்கு இலவச துாதுவராக இருப்பேன்'' என்று புன்முறுவல் பூத்தார். 'மீண்டும் திருப்பூர் வருவேன்... ஒவ்வொரு அமைப்புகளுடன் விரிவாக பேசலாம். வெளி விவகாரத்துறையை கவனிப்பதால், வெளிவிவகாரம் தொடர்பான கோரிக்கையையும் எனக்கு அனுப்பலாம்,' என்று கூறினார். நிறைவாக, 'ஜெய் திருப்பூர்... ஜெய் பாரத்' என்று கூறி உரையை முடித்தார்.



ஒரு லட்சம் தொழிலாளர் பற்றாக்குறை

''திருப்பூரில், தற்போது ஒரு லட்சம் தொழிலாளர் கூடுதலாக தேவைப்படுகின்றனர். புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால், புலம்பெயர்ந்த தொழிலாளர் தேவை அதிகரிக்கும். அத்தகைய தொழிலாளருக்கு போதிய வீட்டுவசதி இல்லை. பாதுகாப்பான தங்குமிட வசதி பெரிய சவாலாக இருக்கிறது. எனவே, 75:25 என்ற விகிதாசார அடிப்படையில், அரசு மற்றும் தொழில்துறையினர் பங்களிப்புடன் வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us