/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு: கம்யூ., - பா.ஜ., மோதல்வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு: கம்யூ., - பா.ஜ., மோதல்
வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு: கம்யூ., - பா.ஜ., மோதல்
வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு: கம்யூ., - பா.ஜ., மோதல்
வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு: கம்யூ., - பா.ஜ., மோதல்
ADDED : ஜன 06, 2024 12:41 AM

திருப்பூர்;வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என, மாநகராட்சி கூட்டத்தில் கம்யூ., கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதற்கு பா.ஜ., கவுன்சிலர் மறுத்து பேசியதால், பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி மன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் நேற்று நடந்த விவாதம்:
ராஜேந்திரன், இ.கம்யூ.,: தமிழகத்தில் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசு நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொண்டது. மத்திய அரசு உரிய நிதி வழங்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
அன்பகம் திருப்பதி (அ.தி.மு.க.,): ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கிய புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணி நிறைவடைந்து திறக்கப்பட்டுள்ளது. இதற்கு தீரன் சின்னமலை பெயரும், டவுன்ஹால் வளாகத்துக்கு இடம் வழங்கியவர் பெயரும் சூட்ட மாநகராட்சி சார்பில் அரசுக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்ப வேண்டும்.
தங்கராஜ் (அ.தி.மு.க.,): சேதமான மின் கம்பங்கள் மாற்ற வேண்டும். பிரதான ரோடுகளில் தெரு விளக்கு மங்கலாக உள்ளது. பிரகாசமான விளக்கு பொருத்த வேண்டும்.
பத்மாவதி (தி.மு.க.,): தெரு விளக்கு, மின் கம்பங்கள் தரமாக இல்லை. இரு ஓரங்களில் மட்டும் கம்பி உள்ளது. நடுவில் வெறும் கான்கிரீட் மட்டும் உள்ளது.
தமிழ்செல்வி (அ.தி.மு.க.,): ஒரு மாதமாக குழாய் உடைப்பு சரி செய்யாமல் உள்ளது. கவுன்சிலர் புகார் கூறினால் கேட்க வேண்டாம் எனத் தெரிவிப்பதாக தகவல் உள்ளது.
செழியன் (த.மா.கா.,): எம்.பி., நிதியில் கட்டிய கஞ்சம்பாளையம், அங்கன்வாடி மையம், 7 மாதமாக திறக்காமல் வீணாகிறது. 3 நாளில் திறக்கப்படும் எனக் கூறியும் நடவடிக்கை இல்லை.
சாந்தி (அ.தி.மு.க.,): டி.எஸ்.கே. நகர் ஆர்ச் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. உயரமான வாகனங்கள் நீண்ட துாரம் சுற்றி வருகின்றன.
குமார் (ம.தி.மு.க.,): கழிவு நீர் செல்லும் சிறு பாலங்களின் மத்தியில் குடிநீர் குழாய் செல்கிறது. ரோடுகள் இரட்டைப் பதிவாக உள்ளது. அதை ரத்து செய்யும் போது, புதிய இடங்களில் ரோடு போட வேண்டும். குழாய் உடைப்பு சரி செய்ய ஆட்கள் வருவதில்லை.
துளசிமணி (இ.கம்யூ.,): வீட்டுக்கு தவறுதலாக வணிக வரி விதிப்பு செய்துள்ளனர். பல ஆண்டாக உள்ள பிரச்னை குறித்து ஆறு மாதமாக அலைக்கழித்தும் நடவடிக்கை இல்லை. மக்களுடன் முதல்வர் முகாமில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பில் இழுத்தடிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாந்தாமணி (ம.தி.மு.க.,): ஒப்பந்ததாரர்களுக்கு உரிய காலத்தில் பில் தொகை வழங்காமல் காலம் தாழ்த்தப்படுகிறது. எந்த பணிக்கு அழைத்தாலும், பில் தொகை வரவில்லை என காரணம் கூறுகின்றனர். பணிக்கு டெண்டர் எடுக்கும் நிறுவனத்தாரை கவுன்சிலரைச் சந்திக்க சொல்லுங்கள். எந்த பணிக்கு யாரை அணுகுவது என்று தெரியவில்லை. மங்கலம் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் விபத்து, போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது.
செல்வராஜ் (இ.கம்யூ.,): குழாய் பதிக்காமல் புது ரோடு பணி தாமதமாகிறது. அவிநாசி ரோட்டில், 5 இடங்களில் பாலங்களின் கீழ் குடிநீர் குழாய் உள்ளது. அதை மாற்ற வேண்டும்.
முத்துசாமி (அ.தி.மு.க.,): பாதாள சாக்கடை திட்டம் தாமதமாகிறது. வடிகால்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. குப்பை தொட்டிகள் அனைத்தும் சேதமாகி பயன்படுத்த முடியாமல் உள்ளது.
நாகராஜ் (ம.தி.மு.க.,): அதிகாரிகள் மத்தியில் உரிய தொடர்பு இல்லாமல் வரி விதிப்பு தாமதமாகிறது. அனுபவமின்மையா எனத் தெரியவில்லை.
ரவிச்சந்திரன் (இ.கம்யூ.,): தெரு விளக்குகளைப் பொறுத்தவரை மின் வாரியம் தவறான தகவல்கள் தருகிறது. அதை ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும்.
கோவிந்தசாமி (மண்டல குழு தலைவர்): 3வது மண்டலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டம் குறித்து விளக்க வேண்டும். இதனை காரணம் காட்டி சாலை பணிகளை தாமதம் செய்கின்றனர். விஜயாபுரம், சந்திராபுரம் பள்ளி பழைய கட்டடங்கள் இடித்து அகற்றும் பணி தாமதமாகிறது.
குணசேகரன் (பா.ஜ.,): மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி தரவில்லை என்பது தவறான தகவல். எப்போது, எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என ஆதாரம் உள்ளது. பெற்ற நிதியை செலவு செய்த விவரம் கேட்டால், கணக்கு தர தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது.
குணசேகரன் இவ்வாறு பேசிய போது கம்யூ., கவுன்சிலர்கள் மறுப்பு கூறினார். இதனால், இரு தரப்பிடையே காரசாரமாக விவாதம் நடந்தது. உடனே மேயர் தினேஷ்குமார் குறுக்கிட்டு, 'இது குறித்து வெளியே விளக்கமாக விவாதம் நடத்தலாம்' எனக்கூறி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.