Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நகைக்கடன் பெற புதிய விதிமுறை விவசாய அமைப்பினர் கண்டனம்

நகைக்கடன் பெற புதிய விதிமுறை விவசாய அமைப்பினர் கண்டனம்

நகைக்கடன் பெற புதிய விதிமுறை விவசாய அமைப்பினர் கண்டனம்

நகைக்கடன் பெற புதிய விதிமுறை விவசாய அமைப்பினர் கண்டனம்

ADDED : மே 24, 2025 05:57 AM


Google News
பல்லடம் : தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் குறித்து, விவசாய சங்க நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது: வங்கி நகைக்கடன் பெறுவது குறித்து புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, 4 சதவீத வட்டியில் நகை கடன் பெற்று வந்த நிலையில், நகைக் கடன் திட்டத்தை நிறுத்தி வைத்தது விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, வட்டி மட்டுமே செலுத்தி நகைக் கடனை புதுப்பித்து வந்த முறையை மாற்றி, முழு தொகையை கட்டினால் மட்டுமே நகை கடன் ரத்து செய்யப்படும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டது.

தற்போது, நகை களின் உரிமையை நிரூபிக்க வேண்டி உரிமைச் சான்று அல்லது ரசீது உள்ளிட்ட ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றும், நகைக் கடைகளில் வாங்கப்பட்ட தங்க காசுகளுக்கு நகை கடன் கொடுக்கப்படாது என்றும் விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதிக வட்டிக்கு கடன் கொடுக்கும் தனியார் நிறுவனங்களை நோக்கி செல்வதற்கான அறிவிப்பாக இது உள்ளது.

பொதுமக்களிடம், 100 சதவீதம் திரும்ப வசூல் ஆகக்கூடிய தங்க நகை கடனுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கும் ரிசர்வ் வங்கி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி அளிக்க பரிந்துரை செய்கிறது. சராசரியாக, 9.75 சதவீத வட்டியில் நகைக்கடன் பெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள், பொதுமக்கள், 22 சதவீத வட்டியில் கடன் பெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, ரிசர்வ் வங்கியின் இந்த வழிகாட்டுதலை திரும்ப பெற வேண்டும்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன்: தலைமுறையாக பயன்படுத்தப்பட்டு வரும் நகைகளுக்கு உரிம சான்று அல்லது ரசீது வழங்கினால் மட்டுமே நகை கடன் வழங்கப்படும் என்பது ஏற்புடையதல்ல.

வங்கிகளால் விற்கப்பட்ட தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் என்றால், மற்றவர்கள் என்ன செய்வார்கள்? நகையை மீட்டு மறுநாள் மீண்டும் கடன் வாங்குவது என்பது மக்களை வதைக்கும் செயலாகும். நகை கடன் எளிதாக கிடைப்பதை தடுத்து, மக்களை தனியார் அடகு கடைகளை நோக்கி செல்ல வைக்கும் செயலாக இது உள்ளது. ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள இந்த புதிய நகை கடன் வழிகாட்டுதல்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us