/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆதார் மையத்தில் அலைக்கழிப்பு; தாலுகா ஆபீசை மக்கள் முற்றுகை ஆதார் மையத்தில் அலைக்கழிப்பு; தாலுகா ஆபீசை மக்கள் முற்றுகை
ஆதார் மையத்தில் அலைக்கழிப்பு; தாலுகா ஆபீசை மக்கள் முற்றுகை
ஆதார் மையத்தில் அலைக்கழிப்பு; தாலுகா ஆபீசை மக்கள் முற்றுகை
ஆதார் மையத்தில் அலைக்கழிப்பு; தாலுகா ஆபீசை மக்கள் முற்றுகை
ADDED : செப் 09, 2025 11:13 PM

அவிநாசி; ஆதார் மையத்தில் ஊழியர் வராததால், தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டு தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.
அவிநாசி தாலுகா அலுவலகத்தில் உள்ள இ--சேவை மையத்தில் ஆதார் மையம் செயல்படுகிறது. இம்மையத்துக்கு, நாள்தோறும், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகின்றனர். ஆனால், தினமும், 50 டோக்கன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆதார் சேவை மையத்தில், ஒரு ஊழியர் மட்டுமே உள்ளார்.
தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம் போதுமான இடவசதியுடன் இருந்தபோதிலும் கூடுதலாக கம்ப்யூட்டர் மற்றும் ஊழியர்களை வைத்து மக்களுக்கு சேவை செய்து தர பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த, 8ம் தேதி காலை 7:00 மணி முதல் தொழிலாளர்கள் பலர் விடுப்பு எடுத்து, ஆதார் மையத்தில் காத்திருந்தனர்.
ஆனால், ஊழியர் வரவில்லை. காலை, 11:00 மணிக்கு, அவர் இன்று விடுமுறை என வருவாய்த்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர். இந்நிலையில், நேற்றும் இதே நிலை நீடித்ததால், பல மணி நேரமாக காத்திருந்த பொதுமக்கள் ஆவேசம் அடைந்து தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர். இது குறித்து துணை தாசில்தார் சாந்தியிடம், 'நாள்தோறும் பல மணி நேரம் காத்திருந்தும் ஆதார் பதிவு செய்ய முடியவில்லை.
குழந்தைகளுடன் மிகவும் அவதிப்படுகிறோம். உடனடியாக ஆதார் மையத்தில் ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும்,' என கோரிக்கை விடுத்தனர்.
துணை தாசில்தார் கூறுகையில், 'ஆதார் மையத்தில் பணியில் உள்ள ஊழியர் விபத்தின் காரணமாக கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வரும் 16ம் தேதி வரை விடுப்பு எடுத்துள்ளார்.
மாற்றுப் பணிக்கு வேறு மையத்தில் இருந்து ஊழியரை அனுப்ப கேட்டுள்ளோம். அனைத்து பகுதிகளிலும் ஒரு ஊழியர் மட்டுமே இந்த பணிகளை செய்து வருவதால் மற்ற பகுதிகளிலும் பணிகள் முடங்கும் என்பதால் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்,' என்றார்.