/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அமைதிக்கு அச்சுறுத்தல்! பல்லடம் அனைத்து கட்சியினர் கண்டனம்அமைதிக்கு அச்சுறுத்தல்! பல்லடம் அனைத்து கட்சியினர் கண்டனம்
அமைதிக்கு அச்சுறுத்தல்! பல்லடம் அனைத்து கட்சியினர் கண்டனம்
அமைதிக்கு அச்சுறுத்தல்! பல்லடம் அனைத்து கட்சியினர் கண்டனம்
அமைதிக்கு அச்சுறுத்தல்! பல்லடம் அனைத்து கட்சியினர் கண்டனம்
ADDED : ஜன 27, 2024 11:40 PM

பல்லடம்:தொடர் அரிவாள் வெட்டு சம்பவங்களால், பல்லடம் அமைதியை இழந்து வருவதாக, அனைத்துக் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பல்லடத்தில், டிவி நிருபர் நேசபிரபுவின் உடலில், கூலிப்படையினர், 64 இடங்களில் கொடூரமாக வெட்டினர். அவர் தற்போது, கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில மாதம் முன், கள்ளக்கிணறு பகுதியில், போதைக்கும்பல், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை கொடூரமாக வெட்டி கொன்றது.
இவ்வாறு, பல்லடத்தில் அதிகரித்து வரும் கூலிப்படை மற்றும் அரிவாள் கலாசாரம் ஆகியவற்றை கண்டித்து, அனைத்துக் கட்சியினர், சங்கங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: தொழிலாளர்கள் நிறைந்த பல்லடத்தில், தொழிலாளர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக, அடுத்தடுத்த அசம்பாவிதங்கள் நடந்தேறி வருகின்றன. கூலிப்படைகளின் அட்டகாசம், அரிவாள் கலாச்சாரம் ஆகியவை அதிகரித்துள்ளன.
சட்ட விரோத மது, மற்றும் கஞ்சா விற்பனை, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள், அமைதியாக உள்ள பல்லடத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
வேலைவாய்ப்பு தேடி இங்கு வரும் தொழிலாளர்களுக்கு இது அச்சுறுத்தலாய் அமையும் என்பதால், பின்நாளில், தொழில்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. காவல்துறையின் அலட்சியப் போக்கும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
வளர்ந்து வரும் பல்லடம் வட்டாரத்தில், குற்ற சம்பவங்களை தடுக்க, கூடுதல் போலீஸ் ஸ்டேஷன்களை அமைத்து, கண்காணிப்பினை தீவிரப்படுத்த வேண்டும். அடுத்தடுத்த அச்சுறுத்தல் சம்பவங்களால், அமைதியை இழந்துள்ள பல்லடம் மக்களுக்கு போலீசார் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க., பா.ஜ., காங்., வி.சி., த.மு.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை ஒருங்கிணைத்தார்.