குழாய் உடைந்து ஆறாக ஓடும் குடிநீர்
குழாய் உடைந்து ஆறாக ஓடும் குடிநீர்
குழாய் உடைந்து ஆறாக ஓடும் குடிநீர்
ADDED : ஜன 05, 2024 01:17 AM

திருப்பூர்;திருப்பூர், தாராபுரம் ரோட்டில் குழாய் உடைந்து, தண்ணீர் பல இடங்களில் வழிந்தோடி, சாக்கடை கால்வாயில் கலக்கிறது.
தாராபுரம் - திருப்பூர் ரோட்டில், கே.செட்டிபாளையம் துவங்கி, உஷா தியேட்டர் ஸ்டாப் வரை, நான்கு கி.மீ., துாரத்தில், ஆறு இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் மெயின் ரோட்டில் வீணாகிறது. செட்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே, 100 மீட்டருக்குள், இரு இடத்தில் வீணாகும் தண்ணீர், வேலாயுதசாமி திருமண மண்டபம் வரை, 500 மீ., துாரத்துக்கு நடுரோட்டில் வழிந்தோடுகிறது.
அதிக பாரத்துடன் கனரக வாகனங்கள், லாரிகள் செல்வதால், சாலை சேதமாகிறது. கரட்டாங்காடு, புதுார் பிரிவு ஸ்டாப்பில் குழாய் உடைந்து அவ்வப்போது வீணாகி, அதிகாரிகள் பார்வையிடுவதற்குள், சாலையே பள்ளமாகி விட்டது. கவனிக்காமல் வரும் வாகனஓட்டிகள் தடுமாறியபடி வாகனத்தை இயக்குகின்றனர்.
சங்கிலிபள்ளம் பாலம் அருகே, தனியார் வங்கி முன், மெயின் குழாய் உடைந்து, 24 மணி நேரமும் தண்ணீர் கால்வாயில் வீணாகிறது. இவ்வாறு பல இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவது பத்து நாட்களுக்கு மேலாக தொடரும் நிலையில், நெடுஞ்சாலைத்துறையினர், குடிநீர்வடிகால்வாரிய அதிகாரிகள் ஒருமுறை கூட இச்சாலையை பார்வையிடவே இல்லை. வாகனஓட்டிகள் சிரமம் தொடர்கிறது.