Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் மறியல்; விபத்து பகுதியில் மேம்பாலம் அமைக்கணும்

தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் மறியல்; விபத்து பகுதியில் மேம்பாலம் அமைக்கணும்

தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் மறியல்; விபத்து பகுதியில் மேம்பாலம் அமைக்கணும்

தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் மறியல்; விபத்து பகுதியில் மேம்பாலம் அமைக்கணும்

ADDED : ஜன 06, 2024 12:30 AM


Google News
உடுமலை;அடிக்கடி விபத்து ஏற்படும் சந்திப்பு பகுதியில், மேம்பாலம், ரவுண்டானா அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாலப்பம்பட்டியில் சாலை மறியலில், மக்கள் ஈடுபட்டனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து பாதித்தது.

கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையுடன், நான்கு வழிச்சாலைக்கான அணுகுசாலை இணையும் சந்திப்பு பகுதி, பாலப்பம்பட்டியில் அமைந்துள்ளது.

புதிதாக அணுகுசாலை அமைக்கப்பட்ட பிறகு, அப்பகுதியில், பல்வேறு போக்குவரத்து குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில், பழநி நோக்கி செல்லும் வாகனங்கள், அணுகுசாலையிலுள்ள 'எஸ்' வளைவை கடந்து, பாலப்பம்பட்டியில், மீண்டும் நெடுஞ்சாலையில் இணைய வேண்டியுள்ளது.

அவ்விடத்தில், ஒரு வழிப்பாதையிலும், எதிர் திசையில் வாகனங்கள் வருகிறது. இத்தகைய குளறுபடியால், சந்திப்பு பகுதி மற்றும் பாலப்பம்பட்டியில், தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது; உயிரிழப்புகளும் நடந்துள்ளது.

எனவே, அவ்விடத்தில் நிலவும் குளறுபடிகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல மாதமாக வலியுறுத்தி வந்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நேற்று காலை அவ்விடத்தில், பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதனால், ஆவேசமடைந்த மக்கள் நேற்று மாலை, பாலப்பம்பட்டியில், தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு, உடுமலை போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள், 'நான்கு வழிச்சாலைக்கான அணுகுசாலை பணிகள் துவங்கியதில் இருந்தே தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

ராஜாவூர் சந்திப்பு பகுதியில் இருந்து, பாலப்பம்பட்டி வரை வாகனங்கள் செல்வதில், பல்வேறு இடையூறுகள் உள்ளது. அதிக போக்குவரத்து உள்ள இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்க, மேம்பாலம் அமைக்க வேண்டும்.

எச்சரிக்கை பலகை வைத்தல், ரவுண்டானா ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். போராட்டத்தால், இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us