/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் 'டாக்டர்' ஆன துாய்மை பணியாளர் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் 'டாக்டர்' ஆன துாய்மை பணியாளர்
மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் 'டாக்டர்' ஆன துாய்மை பணியாளர்
மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் 'டாக்டர்' ஆன துாய்மை பணியாளர்
மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் 'டாக்டர்' ஆன துாய்மை பணியாளர்
ADDED : ஜூன் 17, 2025 01:21 AM

உடுமலை; மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில், துாய்மை பணியாளர், காயத்துக்கு கட்டுப்போடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 2015ல் தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இருப்பினும், போதிய டாக்டர்கள், செவிலியர்கள் இல்லை.
சில தினங்களுக்கு முன், அப்பகுதியை சேர்ந்த ஒருவர் இரவு நேரத்தில் காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற இம்மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, காயத்தை சுத்தம் செய்து, கட்டுப்போடும் பணியை தற்காலிக துப்புரவு பெண் பணியாளர் ஒருவர் செய்துள்ளார்.
இது குறித்து காயம்பட்டவரின் உறவினர் கேள்வி எழுப்பியதுடன், அதை வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டார். டாக்டர், செவிலியர் செய்ய வேண்டிய பணியை, தற்காலிக துப்புரவு பணியாளர் செய்வது, மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக, அனைத்து தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறை அதிகாரிகள் கூறுகையில், 'மடத்துக்குளம் அரசு மருத்துவமனை சம்பவம் குறித்து அன்று பணியில் இருந்த டாக்டர், செவிலியர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடக்கிறது. காலில் கட்டுப்போடும் போது, மருத்துவ பணியாளர்கள் இல்லாதது மற்றும் துாய்மை பணியாளர் அப்பணியை மேற்கொண்டது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, 'தமிழக சுகாதார துறை சீரழிவு பாதையில் பயணிக்கிறது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.