/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/2500 ஆண்டு காலமாக 'அழியா வரலாறு' இன்றும் தொடரும் நடுகல் வழிபாடு2500 ஆண்டு காலமாக 'அழியா வரலாறு' இன்றும் தொடரும் நடுகல் வழிபாடு
2500 ஆண்டு காலமாக 'அழியா வரலாறு' இன்றும் தொடரும் நடுகல் வழிபாடு
2500 ஆண்டு காலமாக 'அழியா வரலாறு' இன்றும் தொடரும் நடுகல் வழிபாடு
2500 ஆண்டு காலமாக 'அழியா வரலாறு' இன்றும் தொடரும் நடுகல் வழிபாடு
ADDED : ஜன 06, 2024 11:51 PM

''வாழ்நாளில், நமக்கான மிக முக்கிய கடமைகளில், நம் சந்ததிகளை, வாரிசுகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். அடுத்து, நம் பெற்றோர், மூதாதையர்களை நல்லவிதமாக பார்த்து கொள்ள வேண்டும். இவற்றை விட முக்கியமானது, இறந்துபோன நம் முன்னோர்களை வழிபட வேண்டும்'' என்கிறது தர்ம சாஸ்திரம்.
இந்த கோட்பாட்டின் படி, 2,500 ஆண்டு பாரம்பரியம் நிறைந்த நடுகல் வழிபாட்டை, இன்றளவும் மக்கள் கடைபிடித்து வருகின்றனர். திருப்பூர் உட்பட கொங்கு மண்டலத்தில், 3,000 ஆண்டுக்கு முன் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் நிரம்ப இருக்கின்றன. திருப்பூர், பொங்குபாளையத்தில் ஒரு குடியிருப்புக்கு அருகில், சாலையோரம் புலிக்குத்தி நடுகல் உள்ளது. இது, 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கின்றனர், வரலாற்று ஆய்வாளர்கள். இந்த புலிக்குத்தி நடுகல்லை அங்குள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் பொதுமக்கள் இன்றும் வழிபட்டு வருகின்றனர்.
வீரத்தின் அடையாளம்
அக்காலகட்டத்தில் கால்நடை வளர்ப்பு தான் பிரதானமாக இருந்துள்ளது. தங்களின் செல்வமாக கருதி, வளர்க்கும் கால்நடைகளை, தாக்க வரும் புலியை எதிர்த்து போரிட்டு இறந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் தான் இது. இந்த நடுகல்லில், வீரன், தன்னை தாக்க வரும் புலியை இரு கைகளாலும் ஈட்டியை கொண்டு தாக்குவது போலவும், புலி, தன் பின்னங்கால்களை தரையில் ஊன்றியவாறு, முன்னங்கால்களை வீரனின் தொடை மீது பதித்துள்ளது போலவும் செதுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:
நம் வழிபாட்டு முறை என்பது, முன்னோரை வழிபடுவது தான்; அவர்கள் உயிரோடு இருக்கும் போது நம்மை பாதுகாத்தது போன்று, இறந்த பின்னும் அவர்களது ஆன்மா நம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை தான் இது. தன்னை விட புலி, வலிமையானது என உணர்ந்தும், அதோடு போரிடும் வீரன், புலியால் கால்நடைகள் இறப்பதை தடுத்து, மக்களுக்கு அரணாக இருந்துள்ளான்.
இதுபோன்ற வழிபாடு என்பது, உலகம் முழுக்கவே உள்ளது. நம் நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள், வீர மரணம் அடையும் போது, அவர்களுக்கு நினைவு துாண் எழுப்பி, அவர்களுக்கு மரியாதை செலுத்துவது போன்றது தான் நடுகல் வழிபாடு. உலகம் இருக்கும் வரை இந்த வழிபாட்டு முறை இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.