/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 1.5 கோடி பிளாஸ்டிக் பைகள் புழக்கம்; ஜவுளி உற்பத்தியாளர்கள் வேதனை 1.5 கோடி பிளாஸ்டிக் பைகள் புழக்கம்; ஜவுளி உற்பத்தியாளர்கள் வேதனை
1.5 கோடி பிளாஸ்டிக் பைகள் புழக்கம்; ஜவுளி உற்பத்தியாளர்கள் வேதனை
1.5 கோடி பிளாஸ்டிக் பைகள் புழக்கம்; ஜவுளி உற்பத்தியாளர்கள் வேதனை
1.5 கோடி பிளாஸ்டிக் பைகள் புழக்கம்; ஜவுளி உற்பத்தியாளர்கள் வேதனை
ADDED : செப் 15, 2025 12:16 AM

பல்லடம்; ''தமிழகத்தில், தினசரி 1.50 கோடி பிளாஸ்டிக் பைகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றை, துணிப்பைகளாக மாற்ற தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என ஜவுளி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது: காடா துணி பைகளுக்கு, 12 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி., மத்திய அரசின் நடவடிக்கையால், 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது, விசைத்தறி காடா உற்பத்தி செய்யும் தொழில்துறை சார்ந்தவர்களுக்கு மிகவும் பயனளிக்கும். ஆனால், பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு காரணமாக, உள்நாட்டிலேயே துணிப்பைகளுக்கு போட்டி நிலவுகிறது.
கொரோனா காலத்தில் 5 லட்சம் துணிப்பை கொரோனா காலகட்டத்தில், தமிழக அரசு முன்னெடுத்த 'மீண்டும் மஞ்சப்பை' திட்டம் மூலம், 5 லட்சம் காடா துணிப்பைகள் உற்பத்தி செய்யப்பட்டன.
எண்ணற்ற குறு, சிறு தொழில் துறையினர், மகளிர் சுய உதவிக் குழுவினர் இதன் மூலம் பயனடைந்து வந்தனர். அதிகாரிகளின் மெத்தனப் போக்கு காரணமாக, வந்த வேகத்திலேயே துணிப்பைகள் மாயமாகின.
நான்கில் ஒருவர் பிளாஸ்டிக் பை தமிழகத்தில், நான்கில் ஒருவர் கட்டாயமாக பிளாஸ்டிக் பை பயன்படுத்துகின்றனர். தினசரி, 1.50 கோடி பிளாஸ்டிக் பைகள் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளன.
இவை அனைத்தும் துணிப்பைகளாக மாறினால், காடா துணி உற்பத்தி அதிகரிப்பதுடன், எத்தனையோ பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்தும் விடுபடலாம். மத்திய அரசு, காடா துணிப்பைகளுக்கான ஜி.எஸ்.டி.,யை குறைத்துள்ளது, துணிப்பை உற்பத்திக்கு ஏதுவாக உள்ளது. அமெரிக்க வரி விதிப்பு காரணமாக, உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இதன்படி, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, காடா துணி பைகளை பயன்படுத்துவது மூலம், விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் வளர்ச்சிப் பாதைக்குச் செல்லும்.
விழிப்புணர்வுக்கு சரியான தருணம் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், வழக்கத்தைவிட பிளாஸ்டிக் பைகளின் புழக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இக்காலகட்டத்தில், துணிப்பைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
எனவே, தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, துணிப்பைகளின் பயன்பாட்டை புழக்கத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.